விடாது கருப்பாக மாறிய கொரோனா... டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுகத்தில் சிக்கல்!
கொரோனா பிரச்னை காரணமாக, டொயோட்டா அர்பன் க்ரூஸர் காம்பேக்ட் எஸ்யூவி குறித்த நேரத்தில் சந்தைக்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

மாருதி சுஸுகியுடன் கூட்டணி அமைத்து ரீபேட்ஜ் முறையில் புதிய கார்களை அறிமுகம் செய்து வருகிறது டொயோட்டா கார் நிறுவனம். முதலாவதாக மாருதி பலேனோ காரை க்ளான்ஸா என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்தது டொயோட்டா. இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, இரண்டாவதாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து கொண்டு வர இருக்கிறது டொயோட்டா.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் வர இருக்கும் இந்த ரீபேட்ஜ் எஸ்யூவி மாடலானது வரும் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்திருப்பதால், இந்திய கார் சந்தை தொடர்ந்து தள்ளாடி வருகிறது.

எனவே, இப்போது அர்பன் க்ரூஸர் எஸ்யூவியை கொண்டு வருவது உசிதமாக இருக்காது என்று டொயோட்டா கருதுகிறது. அதன்படி, அர்பன் க்ரூஸர் எஸ்யூவி அறிமுகத்தை 3 மாதங்கள் வரை தள்ளி வைக்க டொயோட்டா முடிவு செய்துள்ளதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ரீபேட்ஜ் வெர்ஷனாக புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி வர இருக்கிறது. மாருதி சுஸுகி லோகோவுக்கு பதிலாக டொயோட்டா இடம்பெற்றிருக்கும். இதுதவிர்த்து, சிறிய அளவிலான மாற்றங்களுடன் புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் வேறுபாடுகளுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியிலும் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது. மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட வேரியண்ட்டிலும் எதிர்பார்க்கலாம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் வழங்கப்படும் இரண்டு டாப் வேரியண்ட்டுகளானது புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் வழங்கப்படும் என தெரிகிறது. எனவே, ஆரம்ப விலை அதிகமாக தெரிந்தாலும், அது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டுகளோடு ஒப்பிடும்போது விலை சரியாகவே இருக்கும் என்று கருதலாம்.

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், புதிய டிசைனிலான அலாய் வீல்கள், 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி ரூ.8 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான் உள்ளிட்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். டொயோட்டா பிராண்டின் நம்பகத்தன்மை இது வலுசேர்க்கும்.
குறிப்பு: மாதிரிக்காக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








