புதிய அர்பன் க்ரூஸர் எஸ்யூவி அறிமுகம் குறித்து டொயோட்டா எடுத்த புது முடிவு
கொரோனா ஏற்படுத்தி உள்ள சிக்கலான சூழலில், புதிய அர்பன் க்ரூஸர் எஸ்யூவி அறிமுகம் குறித்து டொயோட்டா புதிய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி சுஸுகி கார்களை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் மாடலாக மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டது. க்ளான்ஸா என்ற பெயரில் டொயோட்டா அறிமுகம் செய்த அந்த கார் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டிலும் டாப் 3 மாடல்களில் ஒன்றாக மாறி இருக்கிறது.

இந்த சூழலில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை டொயோட்டா நிறுவனம் விரைவில் தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் சில மாற்றங்களை செய்து அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்தநிலையில், டொயோட்டா பிராண்டில் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு அண்மையில் அனுமதி அளித்தது. இதையடுத்து, ஓரிரு மாதங்களில் டொயோட்டா பிராண்டில் அர்பன் க்ரூஸர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, வரும் நவம்பர் மாதத்தில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கார்தேக்கோ தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்னையால் அறிமுகத்தை டொயோட்டா நிறுவனத்தின் சில மாதங்கள் தாமதப்படுத்தி உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அனைத்து சிறப்பம்சங்களும் அப்படியே தக்க வைக்கப்படும். மாருதி லோகோவுக்கு பதிலாக டொயோட்டா லோகோ இடம்பெறும். மற்றபடி, பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. அதேநேரத்தில், புதிய வண்ணத் தேர்வுகளில் அர்பன் க்ரூஸர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருக்கும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி ரூ.7.34 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. அதேநேரத்தில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி சற்றே கூடுதல் விலையில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரம்ப விலை ரு.8 லட்சத்தை ஒட்டி நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








