புதிய காம்பேக்ட் எஸ்யூவியுடன் மார்க்கெட்டை கலக்க ஆயத்தமாகும் டொயோட்டா!
இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் மூலமாக இந்தியர்கள் மத்தியில் அசைக்க முடியாத நம்பிக்கை பெற்றுவிட்ட டொயோட்டா கார் நிறுவனம், விரைவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க உள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் வர்த்தகத்தை மிக வலுவான வகையில் கொண்டு செல்லும் முயற்சிகளில் டொயோட்டா கார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதலீடுகளை குறைத்து, லாபத்தை அதிகரிக்கும் வழிகளை கையில் எடுத்துள்ளது.
அதன்படி, பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் வந்தவுடன், வர்த்தகத்திற்கு ஒத்துவராத மாடல்களை கழற்றி விட்டது. அதாவது, முதலீட்டுக்கு தக்கவாறான விற்பனை இருக்காது என்பதால், லிவா மற்றும் எட்டியோஸ் கார்களுக்கு விடை கொடுத்தது.

எனவே, ரூ.10 லட்சம் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் டொயோட்டா நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு கூடுதல் வலு சேர்க்க புதிய மாடல்கள் தேவைப்படுகிறது. இதற்காக, மாருதி சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, மாருதி பலேனோ காரின் ரீபேட்ஜ் மாடலை க்ளான்ஸா என்ற பெயரில் டொயோட்டா அறிமுகப்படுத்தியது.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

க்ளான்ஸாவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே, அடுத்து மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலை களமிறக்க ஆயத்தமாகி வருகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியானது டொயோட்டா பிராண்டில் அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. க்ரில் அமைப்பில் மாற்றங்களுடன் டொயோட்டா லோகோ மற்றும் பெயருடன் வர இருக்கிறது. டொயோட்டா பிராண்டின் மீதுள்ள நன்மதிப்பு மூலமாக அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிடுவோரை மனதில் வைத்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது நிச்சயம் இந்த பண்டிகை காலத்தை அலங்கரிக்கும் மாடல்களில் முக்கியமானதாக இருக்கும்.

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விள்ககுகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியிலும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி ரூ.7.34 லட்சம் முதல் ரூ.11.40 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி அதிகபட்ச வசதிகள் கொண்ட வேரியண்ட்டுகளில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக, ஆரம்ப விலை சற்று கூடுதலாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








