டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்!
டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பன்முக பயன்பாட்டு வகை கார் மார்க்கெட்டில் ஜப்பானை சேர்ந்த டொயோட்டா கார் நிறுவனம் இந்தியர்களின் நம்பகத்தை வெகுவாக பெற்றுவிட்டது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் ஆகிய கார் மாடல்கள் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சொகுசு எம்பிவி கார் மார்க்கெட்டிலும் டொயோட்டா கார் நிறுவனம் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.

வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் மாடலை இந்தியாவில் களமிறக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்ட இந்த மாடலின் அறிமுகம் தள்ளிப்போனது.

ஒருவழியாக, இந்த கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் தேதி விபரத்தை டொயோட்டா இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 26ந் தேதி இந்த கார் இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் பார்ப்பதற்கு பயணிகள் மினி வேன் போன்ற ரகத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள், இரட்டை வண்ண அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கார் 6 பேர் பயணிப்பதற்கான தனித் தனி சொகுசு இருக்கைகள் கொண்டதாக வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த காரில் டிவி திரைகளுடன் பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதன் இருக்கைகள் வென்டிலேட்டட் மற்றும் ஹீட்டடு வசதிகள் கொண்டது.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் கொண்டதாக ஹைப்ரிட் ரக வாகனமாக வர இருக்கிறது. இந்த கார் 180 பிஎஸ் பவரையும், 235 என்எம் டார்க் திறனையும் பெற்றுள்ளது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.80 லட்சம் முதல் ரூ.90 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காருக்கு இணையான ரகத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5 லட்சம் முன்பணத்துடன் இந்த காருக்கு முன்பதிவு ஏற்கப்படுகிறது.

பெரும் பணக்காரர்கள், நட்சத்திர ஓட்டல்களில் விருந்தினர் போக்குவரத்து பயன்பாடுகளுக்கான சிறப்பான தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்கு பெங்களூர் உள்ளிட்ட சில நகரங்களில் ஏற்கனவே முன்பதிவு ஏற்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








