புதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு!
டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு ரக எம்பிவி கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், முதல்முறையாக அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் யுட்டிலிட்டி வகை கார் சந்தையில் வாடிக்கையாளர்களின் அதிக நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக டொயோட்டா விளங்குகிறது. இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களின் மூலமாக இந்தியர்களை கட்டிப் போட்டுவிட்ட டொயோட்டா நிறுவனம் தனது அந்தஸ்தை மேலும் ஒருபடி உயர்த்திக் கொள்ளும் வகையில், சொகுசு ரக எம்பிவி கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் அல்ஃபார்டு காரின் மிக உயரிய வகை மாடலான வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் மாடலையே இந்தியாவில் களமிறக்க உள்ளது டொயோட்டா. இந்த கார் வரும் 26ந் தேதி முறைப்படி இந்திய சந்தையில் விலை அறிவிப்புடன் தடம் பதிக்க காத்திருக்கிறது.

இந்த நிலையில், இந்த காரை எதிர்பார்த்து காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் கார் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், வெல்ஃபயர் காரின் முதல் டீசரை வெளியிட்டு இருக்கிறது டொயோட்டா.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் எக்ஸிகியூட்டிவ் லான்ச் என்ற விலை உயர்ந்த ஒரே வேரியண்ட்டில் மட்டுமே இந்தியாவில் இந்த கார் வர இருக்கிறது. இந்த கார் 8 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள், இரண்டு எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஸ்லைடிங் வகை பின்புற கதவுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பிரிமீயம் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, இரண்டாவது வரிசை பயணிகளுக்கு ஏதுவாக 10.25 அங்குல டிவி திரைகள் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கும்.

இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இறுக்கிறது. இந்த எஞ்சின் 143 எச்பி பவரை அளிக்கும் மின் மோட்டாருடன் இணைந்து செயல்படும். மொத்தமாக 195 எச்பி பவரையும், 235 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வருகிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இந்த காரின் முக்கிய அம்சமாக இருக்கும்.

இந்த கார் 4,935 மிமீ நீளமும், 1,850 மிமீ அகலமும், 1,895 மிமீ உயரமும் கொண்டது. இந்த கார் 3,000 மிமீ வீல் பேஸ் நீளம் கொண்டது. இதனால், உட்புறத்தில் சிறப்பான இடவசதியை எதிர்பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காருக்கு போட்டியான விலையில் வந்தாலும், மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காரைவிட நீளம் 435 மிமீ வரையிலும், அகலம் 78 மிமீ வரையிலும், வீல்பேஸ் 430 மிமீ வரையிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரோல் ஓவர் மிட்டிகேஷன் நுட்பம், டிராக்ஷன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் கார் ரூ.75 லட்சம் முதல் ரூ.85 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் கார் ரூ.68.40 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கும் நிலையில், அதனைவிட அதிக விலையில் இந்த கார் வர இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








