ஆர்சி, டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பால், காலவாதியாகும் வாகனப் பதிவு சான்று மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சமூக பரவலை தடுக்க தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதனால், அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசு நிர்வாகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்று, பர்மிட் போன்றவற்றிற்கான காலாவதி காலம் முடிவடையும் தருவாயில் இருப்போர், புதுப்பிக்க இயலாத நிலை உள்ளது. மேலும், அத்தியாவசிய சேவைக்கான போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கும் பிரச்னை எழும் வாய்ப்பு இருக்கிறது.

இவற்றை மனதில் வைத்து வாகனப் பதிவு சான்று மற்றும் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீடித்துள்ளது. அதாவது, பிப்ரவரி 1 முதல் காலாவதியாகும் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றை புதுப்பிப்பதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், பிப்ரவரி 1ந் தேதிக்கு பிறகு ஓட்டுனர் உரிமம் அல்லது வாகனப் பதிவுச் சான்று காலாவதி ஆனாலும், அந்த வாகனங்களை அனுமதிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை மற்றும் வட்டார அலுவலகப் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது. குறிப்பாக, அத்திவாசிய பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் தடங்கல் இல்லாமல் செல்வதற்கு இந்த அறிவிப்பு உதவும்.

இந்த புதிய அறிவிப்பு மூலமாக சரக்கு வாகனங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதில் தங்கு தடை ஏற்படாது என்றும் மத்திய அரசு கருதுகிறது. மேலும், ஓட்டுனர் உரிமம் மேற்குறிப்பிட்ட காலத்தில் காலவாதியானாலும் கவலை கொள்ள தேவையில்லை.

இது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும் என்பதுடன், தேவையற்ற குழப்பங்கள் மற்றும் தடங்கல்களை வாகன ஓட்டிகள் சந்திக்கும் நிலை தவிர்க்கப்படும். காவல் துறை, போக்குவரத்து துறைக்கும் சரியான வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








