ஃபோக்ஸ்வேகன் ஐடி.க்ராஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... இதோட 'ரேஞ்ச்' வேற லெவல் மக்களே!
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஐடி.க்ராஸ் என்ற புத்தம் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி உள்ளது. இந்த காரின் ரேஞ்ச், செயல்திறன், டாப் ஸ்பீடு ஆகியவை மெர்சலாக்குகிறது.

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய மார்க்கெட்டை ஒரு கை பார்த்துவிடும் முனைப்பில் வர்த்தக திட்டங்களை கையில் எடுத்துள்ளது. பல புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் கொண்டு வருவதற்கு முன்னோட்டமாக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஆட்டோ எக்ஸ்போவில் அந்த நிறுவனம் காட்சிப்படுத்தி உள்ள ஐடி.க்ராஸ் என்ற புத்தம் புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடலின் செயல்திறன் உள்ளிட்ட இதன் சிறப்பம்சங்கள் எல்லோரையும் மெர்சலாக்கும் விதத்தில் உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மாடுலர் எலெக்ட்ரிக் டிரைவ் மேட்ரிக்ஸ் (MEB) என்ற மின்சார கார்களுக்கான பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையில் இந்த புதிய ஐடி.க்ராஸ் எஸ்யூவி கான்செப்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுமையான எஸ்யூவியாக இல்லாமல், கூபே ரக எஸ்யூவி மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த எஸ்யூவி மிக பிரம்மாண்டமான தோற்றத்துடன் தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் வசீகரிக்கிறது. குறிப்பாக, எல்இடி ஹெட்லைட்டுகள், பெரிய அலாய் வீல்கள், பின்புறம் தாழ்ந்த கூரை அமைப்பு ஆகியவை வசீகரமாக உள்ளன.

புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி.க்ராஸ் எஸ்யூவியின் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 30 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்றிவிட முடியுமாம். இந்த காரின் பேட்டரியை முழுமையா சார்ஜ் செய்துவிட்டால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை பெற முடியும்.

இந்த கூபே ரக எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும். இந்த கான்செப்ட் தயாரிப்பு நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டால், வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் வாய்ப்புள்ளது.

எஸ்யூவி கார்களுக்கு ஃபோக்ஸ்வேகன் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால், இந்த கான்செப்ட் கார் மாடலை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்று நம்பலாம்.

ஏனெனில், எலெக்ட்ரிக் கார் உருவாக்கம் மற்றும் உற்பத்திப் பணிகளுக்காக 33 பில்லியன் யூரோவை வரும் 2024ம் ஆண்டுக்குள் முதலீடு செய்வதற்கு ஃபோக்ஸ்வேகன் குழுமம் திட்டமிட்டுள்ளது.

தவிரவும், வரும் 2023ம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யவும், 2025ம் ஆணடுக்குள் 15 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கும் ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








