புதிய பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ள 2020 ஃபோக்ஸ்வேகன் பஸாத் ஃபேஸ்லிஃப்ட் கார்... மும்பைக்கு அருகே சோதனை
ஃபோக்ஸ்வேகன் பஸாத் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக மும்பை-புனே நெடுஞ்சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓவர்ட்ரைவ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய பஸாத் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் என்ஜின் தேர்வுகளில் மிகவும் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இந்த வகையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் வழக்கமான 2.0 லிட்டர் டீசல் என்ஜின் உடன் புதியதாக 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ-பெட்ரோல் என்ஜினும் பொருத்தப்படவுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் வழங்கப்படவுள்ள இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தவல்லது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படவுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள இதன் ஸ்பை படங்கள் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனினால் 2020 பஸாத் மாடலானது ரீடிசைனில் முன்புற பம்பர், எல்இடி மேட்ரிக்ஸ், ஹெட்லேம்ப்கள், புதிய டெயில்லைட்களுடன் புதிய அலாய் சக்கரங்களை பெற்றுள்ளதை வெளிக்காட்டுகின்றன.

இதன் உட்புற கேபின் ட்யூல்-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், எளிதாக திறக்கக்கூடிய ட்ரங்க், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், நினைவக செயல்பாட்டுடன் பவர்டு இருக்கைகள் மற்றும் முழு டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை கொண்டிருக்கும்.

இவை மட்டுமின்றி பார்க் அசிஸ்ட் ரிமோட் ஸ்டார்ட், வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் அடாப்டிவ் விளக்குகள் போன்றவற்றையும் புதிய பஸாத் ஃபேஸ்லிஃப்ட் காரில் எதிர்பார்க்கலாம். பயணிகளின் பாதுகாப்பிற்கு இந்த காரில் ப்ளைண்ட்-ஸ்பாட் மானிடர், லேன் அசிஸ்ட் மற்றும் ரியர் ட்ராஃபிக் அலார்ட் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

சந்தையில் விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் பஸாத் மாடலின் ஹைலைன் வேரியண்ட் கூடுதலாக எலக்ட்ரிக் சன்ரூஃப், 360-டிகிரி பார்க்கிங் கேமிரா போன்ற அம்சங்கள் மட்டுமில்லாமல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டேம்பர்களுடனும் வருவதால் காரின் சஸ்பென்ஷன் அமைப்பு சிறப்பாக ட்யூன் ஆகும்.

ஹைலைன் உள்பட இரு விதமான வேரியண்ட்களில் விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் பஸாத் மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் தற்சமயம் ரூ.35.26 - ரூ.38.75 லட்சமாக உள்ளது. தற்போது சோதனையின் போது கண்டறியப்பட்டுள்ள இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் அறிமுகம் இந்த வருடத்தின் இறுதியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








