ஃபோக்ஸ்வேகன் இந்தியா இணையதளத்தில் டி ராக் எஸ்யூவி பட்டியலிடப்பட்டது!
ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் புராஜெக்ட் 2.0 என்ற வர்த்தக திட்டத்தின் அடிப்படையில் பல புதிய கார் மாடல்களை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில், முதல் மாடலாக டி ராக் என்ற புதிய எஸ்யூவி மாடலை ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.

வரும் ஏப்ரல் மாதம் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் இந்தியா இணையப்பக்கத்தில் புதிய கார்களின் பட்டியலில் டி ராக் எஸ்யூவியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள ஃபோக்ஸ்வேகன் டீலர்களில் இந்த எஸ்யூவிக்கு முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி 4,234 மிமீ நீளமும், 1,819 மிமீ அகலமும், 1,573 மிமீ உயரமும் கொண்டதாக உள்ளது. இந்த கார் 2,603 மிமீ வீல் பேஸ் பெற்றிருக்கிறது. 445 லிட்டர் பூட் ரூம் இடவசதியையும் பெற்றிருக்கிறது. பின் இருக்கையை மடக்கும்போது பூட் ரூம் இடவசதியை 1,290 லிட்டர் கொள்ளளவுக்கு உயர்த்த முடியும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள், பனோரமிக் சன்ரூஃப், வியன்னா லெதர் இருக்கைகள், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

இந்த காரில் கீ லெஸ் என்ட்ரி, 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

ஐரோப்பிய சந்தையில் பல எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வர இருக்கிறது.

இந்த கார் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும், இந்த கார் அனைத்து வசதிகளும் நிரம்பிய ஒரே வேரியண்ட்டில் கிடைக்கும்.

ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி கார்களுக்கு போட்டியான ரகதத்தில் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி மாடலானது ரூ.17 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








