மாருதி பிரெஸ்ஸாவுக்கு போட்டியாக வரும் ஃபோக்ஸ்வேகன் டைகுன்... முக்கிய விபரங்கள்!
மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியின் முக்கிய தொழில்நுட்ப விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்திய கார் மார்க்கெட்டில் வலுவான நிலையை பெற வேண்டும் எனில், எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்துவதே ஒரே வழி என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக, கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் பல புதிய மாடல்களை இந்தியர்களின் பார்வைக்கு கொண்டு வந்து ஆர்வத்தை எக்கச்சக்கமாக தூண்டியது.
ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

அதில், அனைவருக்கும் சிறப்பான பட்ஜெட்டில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த மாடல்தான் ஃபோக்ஸ்வேகன் டைகுன். அதாவது, மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ கார்களுக்கு இணையான ரகத்தில் இது தெரிவிக்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் பாரம்பரிய வடிவமைப்புடன் தோற்றத்தில் மிகவும் வசீகரமாகவும், பல நவீன தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருப்பதற்கான தகுதிகளை இந்த எஸ்யூவி பெற்றிருந்தது.

இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் அறிமுகம் மற்றும் முக்கிய தொழில்நுட்ப விபரங்கள் குறித்த தகவல்களை கார் அண்ட் பைக் தளத்திற்கு அளித்த பேட்டியில், ஃபோக்ஸ்வேகன் இந்தியா தலைவர் ஸ்டீபன் நாப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதன்படி, ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியானது அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, இன்னும் ஓர் ஆண்டில் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஃபோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவியானது 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலில் மட்டுமே வர இருக்கிறது. அதாவது, நகர்ப்புற பயன்பாட்டுக்கான அர்பன் ரக எஸ்யூவி மாடல்களில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் எடுபடாது என்றும், அதற்கான சந்தை வாய்ப்பு இல்லை என்பதுமே இந்த முடிவிற்கு காரணம்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில் இந்தியாவுக்காக மாறுதல்கள் செய்யப்பட்ட எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த புதிய மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கும்.

எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எலஇடி டெயில் லைட்டுகள், பின்புறத்தில் இரண்டு டெயில் லைட் க்ளஸ்ட்டர்களையும் இணைக்கும் லைட் பார் அமைப்பு, டிஃப்யூசர் தோற்றத்தை வழங்கும் பாகம், க்ரோம் க்ரில் அமைப்பு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்த காரின் உட்புறமும் மிகவும் பிரிமீயமாக இருக்கும். தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், ஃபாஸ்ட் சார்ஜர் வசதிகள் இடம்பெற்றிருக்கும். போட்டியாளர்களுக்கு சரியான போட்டியை கொடுக்கும் மதிப்புடன் இந்த புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்த ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








