ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் 7 சீட்டர் பிரிமீயம் எஸ்யூவி அறிமுக தேதி விபரம்!
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய கார் மார்க்கெட்டில் மிக முக்கிய இடத்தை பிடிப்பதற்கு ஏதுவாக, புதிய எஸ்யூவி மாடல்களை வரிசை கட்ட ஆயத்தமாகி வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஆட்டோ எக்ஸ்போவில் கூட பல எஸ்யூவி மாடல்களை காட்சிப்படுத்தி பார்வையாளர்களை வசியம் செய்தது.

மேலும், ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த டி ராக் மற்றும் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஆகிய இரண்டு எஸ்யூவி மாடல்களையும் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. இதில், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸயூவி வரும் மார்ச் 6ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்தியாவின் பிரிமீயம் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் டிகுவான் எஸ்யூவியின் 5 சீட்டர் மாடல் ஏற்கனவே விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. முக்கிய போட்டியாக கருதப்படும் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் ஆகிய மாடல்கள் 7 சீட்டர்களாகவே உள்ளன.

ஆனால், டிகுவான் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக இருப்பதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை எதிர்பார்த்த அளவு ஈர்க்கவில்லை. இந்த சூழலில்தான், டிகுவான் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலாக டிகுவான் ஆல் ஸ்பேஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 18 அங்குல அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த காரில் வியன்னா லெதர் இருக்கைகள், காரின் இயக்கம் குறித்த முக்கியத் தகவல்களை வழங்கும் சாதனம், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.

இந்த எஸ்யூவியில் 7 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன.

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் 5 சீட்டர் மாடலில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

இந்த எஞ்சின் 190 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் 5 சீட்டர் மாடலானது ரூ.28 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி 7 சீட்டர் மாடலானது ரூ.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications