டோல்கேட் ஊழியர்களிடம் பொறுமை இழந்து பத்ரகாளியாட்டம் ஆடிய பெண்... எதற்காக தெரியுமா..? - வைரல் வீடியோ!
இளம்பெண் ஒருவர் பொறுமையை இழந்து டோல்கேட் ஊழியர்களிடம் பத்ரகாளியாட்டம் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டோல்கேட் என்றாலே விதிமுறை மீறல், அடாவடி தனம், அதிக கட்டணம், அராஜகம் உள்ளிட்ட விஷயங்கள்தான் நமது நினைவுக்கு வரும். இதனை வெளிப்படுத்துகின்ற வகையிலேயே நாட்டில் உள்ள பல்வேறு டோல்கேட்களில் ஒரு சில கசப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இத்தகைய செயல்பாட்டை ஒழிக்கும் விதமாக டோல்கேட்டுகளில் கட்டணம் செலுத்த ஃபாஸ்ட்டேக் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

குறிப்பாக, வாகன ஓட்டிகள் மற்றும் டோல்கேட் ஊழியர்களிடம் ஏற்படும் மோதலை தவிர்க்கும் விதமாக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இது, ரொக்கமாக அல்லாமல் ஆன்லைனிலேயே டோல்கேட்டுக்கு உண்டான கட்டணத்தை செலுத்த உதவும்.
தொடர்ந்து, அதிக கட்டணம் வசூலிப்பதையும் இது தடுக்கும். இதானலேயே மத்திய அரசு இத்திட்டத்தை நிச்சயம் அனைத்து வாகனங்களிலும் நிறுவ வேண்டும் என கூறியிருக்கின்றது.

ஆகையால், கார் மற்றும் கனரக வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அவர்களின் வாகனங்களின் ஃபாஸ்ட்டேக்கினை நிறுவுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மிக முக்கியமாக ஃபாஸ்ட்டேக் மூலம் பணம் செலுத்த சில நொடிகளே போதும் என அரசு தரப்பில் கூறப்படுகின்றது. இதனால் டோல்கேட்டுகளில் ஏற்படும் நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், பல டோல்கேட்டுகளில் தற்போது வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக முக்கிய நகரங்களின் எல்லைப் பகுதியில் உள்ள டோல்கேட்டுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
அதிலும், மிக முக்கியமாக பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் சொல்ல முடியாத அளவில் நெரிசல் ஏற்படுக்கின்றது.

இத்தகைய ஓர் சம்பவம்தான் சமீபத்தில் கேரள மாநிலத்தின் மிக முக்கியமான டோல்கேட்டுகளில் ஒன்றான பலியோக்கார சுங்கச்சாவடியில் அரங்கேறியுள்ளது. இங்கு போக்குவரத்து நெரிசல் என்பது தொடர் கதையாகிவிட்டதாக அப்பகுதி வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.
இந்நிலையில், இந்த டோல்கேட் வழியே வந்த இளம்பெண் ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்த காரணத்தால் பொறுமையை இழந்து டோல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் கடந்த 30 நிமிடங்களுக்கும் அதிகமாக டோல்பிளாசாவில் காத்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனாலயே காரை விட்டு இறங்கிய அவர் முன்னே நடந்துச் சென்று டோல் ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து, டோலின் தடுப்பை திறக்க விடாமல் தடுத்து வாகனங்களை இலவசமாக கடந்துச் செல்லவும் செய்தார்.

இளம்பெண்ணின் இந்த செயலை டோல் ஊழியர்கள் சிலர் அவர்களது செல்போனில் படம்பிடிக்க ஆரம்பித்தனர். இதனை விரும்பாத அப்பெண் செல்போனை தட்டிவிட்டார். இதனால் கடும் ஆத்திரமுற்ற டோல் ஊழியர் அப்பெண்ணை தாக்க முற்பட்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ச்சியாக, டோல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண் 20 நிமிடங்களுக்கும் அதிகமாக டோல்கேட்டை திறந்துவைத்து வாகனங்களை இலவச கடக்க வழிவகை செய்தார்.

இந்த சம்பவம்குறித்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் சென்னையில்கூட இதேபோன்றதொரு சம்பவம் அரங்கேறியிருந்தது. அரசு பேருந்துவிடம் கட்டணம் கேட்டு அத்துமீறலில் ஈடுபட்ட பரனூர் டோல் பிளாசாவிற்கு பொதுமக்கள் தக்க பதிலடி கொடுத்திருந்தனர்.
இதேபாணியில் தனியாளாக ஒரு இளம்பெண் அத்தனை டோல் ஊழியர்களையும் தெரிக்கவிட்டது தற்போது வைரலாகி வருகின்றது.

இச்சம்பவம்குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். மேலும், அப்பெண்ணிடம் புகார் எடுக்க வேண்டுமா என்று கேட்டதற்கு, அவர் தேவையில்லை என கூறி அங்கிருந்து புறப்பட்டதாக கூறப்படுகின்றது.
எனவே, இந்த சம்பவம்குறித்து வழக்கு எதுவும் பதியவில்லை என கூறப்படுகின்றது.
டோல்பிளாசாவில் அதிக நேரம் காத்திருக்கும் வாகனங்களுக்கான நிவாரணம் என்னவென்று விதி இதுவரை தெளிவாக கூறப்படவில்லை. ஆனால், கடந்த 2018ம் ஆண்டு ஆர்டிஐ மூலம் கோரப்பட்டதில், ஒரு வாகனத்திற்கு மொத்த காத்திருப்பு நேரம் 3 நிமிடங்கள்தான் என கூறப்பட்டுள்ளது. இதை கடந்து ஓர் காத்திருக்க வேண்டுமானால் அதனை இலவசமாக கடக்க அனுமதிக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.

இதனை டோல் நிர்வாகமும் சரி, ஊழியர்களும் சரி கடைபிடிப்பதே இல்லை. மேலும், விதியை கடைபிடிக்கும்படி கூறும் வாகன ஓட்டிகளுக்கு கொலை மிரட்டல் கொடுக்கின்ற வகையில் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில்கூட விதியை முறையாக கடைபிடியுங்கள் என கூறிய ஐயப்ப பக்தர்களை தாக்கியதுடன், அவர்களின் புனித மாலையையும் அறுத்து எறிந்தனர். ஆனால், இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டும் காணாமல் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








