2021 ஜீப் காம்பஸில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன? கார் வாங்கும்முன் இந்த வீடியோவை பாருங்க
2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய தொலைக்காட்சி கமர்ஷியல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஹூண்டாய் டக்ஸன் மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் காருக்கு போட்டியாக விளங்கும் காம்பஸ் மாடலை ஜீப் நிறுவனம் முதன்முதலாக 2017ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

அதன்பின் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு காம்பஸின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் குறிப்பிடத்தக்க அப்கிரேட்களுடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொண்டுவரப்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப விலை அதிகரிப்பை பெற்றிருந்த காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலைகள் தற்சமயம் ரூ.16.99 லட்சத்தில் இருந்து ரூ.28.29 லட்சம் வரையில் உள்ளன.
இந்த நிலையில் தற்போது ஜீப் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள டிவிசி வீடியோவில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களாக புதிய காம்பஸில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் தெளிவாக விளக்கி காட்டப்பட்டுள்ளன.

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் கவனிக்கத்தக்க மாற்றங்கள் முக்கியமாக காரின் முன்பக்கத்தில் தான் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி முன்பக்க க்ரில், எல்இடி டிஆர்எல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் பம்பர் உள்ளிட்டவற்றின் வடிவம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில், புதிய இரட்டை-நிற அலாய் சக்கரங்களை தவிர்த்து பெரிய அளவில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. அதேபோல் பின்பக்கத்திலும் பம்பரின் டிசைன் மட்டுமே சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்புற கேபின் முற்றிலுமாக அப்டேட் செய்யப்பட்டு முன்பை காட்டிலும் ப்ரீமியம் தரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த வகையில் லெதரால் அலங்கரிக்கப்பட்டுள்ள டேஸ்போர்டில் 10.1 இன்ச்சில் பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், புதிய 3-ஸ்போக் அலாய் சக்கரங்கள், முழுவதும் டிஜிட்டில் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் சில வசதிகளை புதியதாக பெற்று வந்துள்ள காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் வழக்கமான 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அமைப்புகளிலும் அவை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளிலும் எந்த மாற்றமும் இல்லை.

அதேபோல் இந்த இரு என்ஜின் தேர்வுகளுடன் கொடுக்கப்படும் 7-ஸ்பீடு டிசிடி மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. காம்பஸின் பெட்ரோல் வெர்சன் ஒரே ஒரு 2-சக்கர ட்ரைவ் தேர்விலும், டீசல் என்ஜின் 4X4 மற்றும் 2-சக்கர ட்ரைவ் தேர்விலும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








