புதிய டாடா சஃபாரி காரின் உற்பத்தி தொடங்கியது... என்ன விலையில் விற்பனைக்கு வரப்போகிறது தெரியுமா?
விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய டாடா சஃபாரி காரின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2019ம் ஆண்டு நடைபெற்ற ஜெனீவா மோட்டார் ஷோவில், டாடா மோட்டாஸ் நிறுவனம் தங்களது 7 சீட்டர் எஸ்யூவியை பஸ்ஸார்டு என்ற பெயரில் காட்சிக்கு வைத்திருந்தது. இதன்பின் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இதே எஸ்யூவி கிராவிட்டாஸ் என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டது. கிராவிட்டாஸ் என்ற பெயரில் 2020ம் ஆண்டிலேயே இந்த 7 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது நடக்கவில்லை. தற்போது அந்த எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் தயாராகி வருகிறது. ஆனால் பஸ்ஸார்டு என்ற பெயரிலோ அல்லது கிராவிட்டாஸ் என்ற பெயரிலோ அந்த எஸ்யூவி விற்பனைக்கு வரப்போவதில்லை. மாறாக சஃபாரி என அறியப்படும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

சஃபாரி என்ற பெயரில் இந்த எஸ்யூவியை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, புனேவில் உள்ள ஆலையில் அதன் உற்பத்தியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில், 2021 சஃபாரி நின்று கொண்டிருப்பதை தற்போது வெளியே கசிந்துள்ள புகைப்படம் ஒன்று நமக்கு காட்டுகிறது.

இதன் அருகே டாடா அல்ட்ராஸ் காரும் நின்று கொண்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய டாடா சஃபாரி பல்வேறு அம்சங்களில் டாடா ஹாரியரை போலவே இருக்கும். ஆனால் ஹாரியரை விட புதிய டாடா சஃபாரி 63 மிமீ நீளமானது மற்றும் 80 மிமீ உயரமானது. ஆனால் அகலம் (1,894 மிமீ) மற்றும் வீல் பேஸில் (2,741 மிமீ) இரண்டு கார்களும் ஒன்று போலவே இருக்கும்.

கேப்டன் இருக்கைகள் உடன் 6 சீட்டர் மாடலாகவும், பென்ச் இருக்கைகள் உடன் 7 சீட்டர் மாடலாகவும் புதிய டாடா சஃபாரி விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் புதிய டாடா சஃபாரியின் டேஷ்போர்டு ஹாரியரில் உள்ளதை போன்றே இருக்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 8.8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.

இதுதவிர ஜேபிஎல் சவுண்டு சிஸ்டம், 7 இன்ச் மல்டி இன்ஃபர்மேஷன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஸ்டியரிங் வீலில் பல்வேறு கண்ட்ரோல்களுக்கான ஸ்விட்ச்கள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 6 ஏர்பேக்குகள், கேமராவுடன் ரியர் பார்க்கிங் சென்சார்கள், டிராக்ஸன் கண்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் இபிடி உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி, ஹாரியருடன் இன்ஜினை பகிர்ந்து கொள்ளவுள்ளது. இதன்படி 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினை புதிய டாடா சஃபாரி பெறவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஹாரியரை விட சுமார் 1 லட்ச ரூபாய் அதிகமான விலையில் புதிய டாடா சஃபாரி விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா ஹாரியர் எஸ்யூவி தற்போதைய நிலையில் 13.84 லட்ச ரூபாய் முதல் 20.30 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் (எக்ஸ் ஷோரூம்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Image Courtesy: Gaadify


Click it and Unblock the Notifications








