7 சீட்டர் காம்பஸ், 10 லட்ச ரூபாய்க்குள் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு வருகின்றன! அடித்து விளையாட போகும் ஜீப்
ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் 7 சீட்டர் வெர்ஷன் அறிமுகம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் ஜீப் நிறுவனத்தின் மாடலாக காம்பஸ் எஸ்யூவி உள்ளது. எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட எஸ்யூவிகளுடன் இந்த 5 சீட்டர் கார் போட்டியிட்டு வருகிறது. காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை ஜீப் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இதற்கு அடுத்தபடியாக காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனை நடப்பாண்டு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஜீப் நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதிய 7 சீட்டர் மாடல், ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு மேலாக நிலைநிறுத்தப்படும்.

டொயோட்டா பார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர் மற்றும் எம்ஜி க்ளோஸ்ட்டர் உள்ளிட்ட மாடல்களுடன், ஜீப் காம்பஸ் 7 சீட்டர் போட்டியிடும். ஜீப் நிறுவனத்தின் இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி கார், மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்டதாக இருக்கும். முன் வரிசையில் 2 இருக்கைகள் வழங்கப்படும். அதே சமயம் நடுவரிசையில் 3 பேர் அமரும் வகையில் பென்ச் வகை இருக்கை கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.

மூன்றாவது மற்றும் கடைசி வரிசையில் 2 பேர் அமரும் வகையில் பென்ச் வகை இருக்கை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனில், 2 லிட்டர்-4 சிலிண்டர் ஃபியட் மல்டிஜெட் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

அதே சமயம் இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஃப்ரண்ட் வீல் டிரைவ் லே-அவுட் ஸ்டாண்டர்டாக இருக்கும் எனவும், ஆல் வீல் டிரைவ் லே-அவுட் ஆப்ஷனாக வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் காம்பஸ் எஸ்யூவி காரின் 7 சீட்டர் வெர்ஷனில் ஜீப் இந்தியா நிறுவனம் பெட்ரோல் இன்ஜின் தேர்வை வழங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயம் இந்த 7 சீட்டர் மாடல் புதிய பெயரை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய பெயர், ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலுக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலுக்கு ஜீப் இந்தியா நிறுவனம் சவாலான விலையை நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய மாடல், ஜீப் இந்தியா நிறுவனத்திற்கு மாதந்தோறும் ஓரளவு விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு பிறகு ஜீப் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள கார், மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆம், வரும் 2022ம் ஆண்டில் 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை ஜீப் இந்தியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட மாடல்களுடன், இந்த கார் போட்டியிடும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








