இப்போதான் அறிமுகமாச்சு அதுக்குள்ள வாங்கிட்டாரு! விலையுயர்ந்த கார்களை வரிசையாக வாங்கி குவிக்கும் பிரபல நடிகர்!
மிக சமீபத்தில் அறிமுகமான மிக மிக விலையுயர்ந்த காரை பிரபல நடிகர் ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு காரை இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. சொகுசு கப்பல்களுக்கு இணையான வசதிக் கொண்ட பென்ட்லீ பென்டைகா, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் போன்ற கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இந்த சொகுசு காரை நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியது.

இந்த காரில் சொகுசு அம்சங்களும், தொழில்நுட்ப அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றன. எனவேதான் மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 காரின் விலை கோடிகளில் காட்சியளிக்கின்றது. ஆம், இந்த காருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 2.43 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் ஆரம்ப நிலை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இத்தகைய விலையுயர்ந்த காரையே பிரபல நடிகர் ஒருவர் வாங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கே பென்ஸ் மேபேக் ஜிஎல்ஸ் 600 லக்சூரி எஸ்யூவி காரை வாங்கியவர் ஆவார். இவர் மிக சமீபத்தில்தான் லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் பியர்ல் கேப்சூல் எடிசன் வாங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்ஸ் 600 சொகுசு காரையும் வாங்கியிருக்கின்றார். முன்னதாக வாங்கப்பட்ட லம்போர்கினி காரின் விலை ரூ. 3.43 கோடி (எக்ஸ்-ஷோரூம் விலை) ஆகும். இதனை நடப்பாண்டு மே மாதத்திலேயே அவர் வாங்கியிருந்தார்.

Image Courtesy: Auto Hangar Mercedes Benz
மேலே பார்த்த கார்கள் மட்டுமின்றி இன்னும் பல சொகுசு கார்களை, அதாவது, பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள லக்சூரி கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார். ரன்வீர் சிங் 'பிரில்லியன்ட் நீலம்' நிறத்திலான மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு காரையே வாங்கியிருக்கின்றார்.

இந்த காரின் உட்பகுதியை அலங்கரிக்கும் விதமாக பென்ஸ் நிறுவனம் பல்வேறு சிறப்பு வசதிகளைச் சேர்த்துள்ளது. காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும் வசதி மற்றும் நப்பா லெதர் போர்வை போர்த்தப்பட்ட இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், பன்முக கலர், மசாஜ் வசதி என அதிக சிறப்பு அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்றது.

இத்துடன், 12.3 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் 12.3 இன்சிலான திரை டிரைவருக்காகவும் மேபேக் ஜிஎல்எஸ்600 காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், பர்மெஸ்டர் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ஆம்பிசியன்ட் மின் விளக்கு, ஒயர்லெஸ் சார்ஜர், என்டிஜி 6 ஹெட்-அப் திரை மற்றும் சிறிய குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவையும் சொகுசு காரில் இடம் பெற்றுள்ளன.

பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜினுடன் 48 வோல்ட் திறன் கொண்ட மின் தொழில்நுட்பம் மற்றும் ஐஎஸ்ஜி அம்சமும் வழங்கப்பட்டுள்ளன. இந்த எஞ்ஜின் 9ஜி-ட்ரானிக் தானியங்கி கியர்பாக்ஸுடன் இணைந்து இயங்கும்.

இதன் திறன் வெளிப்பாடு 558 பிஎஸ் பவராகவும், 730 என்எம் டார்க்காகவும் இருக்கின்றது. இந்த கார் நான்கு அல்லது ஐந்து இருக்கை தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட காரையே அறிமுகமான ஒரே மாதத்திற்குள் ரன்வீர் சிங் தனது இல்லத்திற்கு எடுத்து வந்திருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








