டாடா பஞ்ச் கார் விலை விபரம் கசிவு... அட இவ்ளோ கம்மியா வரபோகுதா!! இத யாருமே எதிர்பார்க்கலையே!!
டாடா பஞ்ச் கார் விலை விபரம் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளது. இதுகுறித்த முக்கிய விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் மிக விரைவில் அதன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களின் வரிசையில் புதிதாக பஞ்ச் (Punch) எனும் புதுமுக மாடலை சேர்க்க இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். இதனை மஹிந்திரா கேயூவி100 மற்றும் மாருதி சுசுகி இக்னிஸ் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்குகிறது டாடா.

இந்த கார் உருவத்திலும், சிறப்பு வசதிகளிலும் அதன் போட்டியாளர்களுக்கு மிகக் கடுமையான சவாலை விடுக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. கடந்த காலங்களில் கார்குறித்து வெளியாகிய தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. இந்த நிலையில், புதிய டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி விலையிலும் அதன் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இணையத்தின் வாயிலாக கசிந்திருக்கும் தகவல் ஒன்று டாடா பஞ்ச் ரூ. 6 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர இருப்பதை உறுதி செய்துள்ளது. ஆகையால், ரூ. 5 லட்சம் அல்லது அதற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் பஞ்ச் விற்பனைக்கு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அதேவேலையில், இந்த கார் மாடலின் உயர்நிலை வேரியண்ட் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

இதுகுறித்த தகவலே தற்போது வெளியாகி பஞ்ச் கார் எதிர்பார்ப்பாளர்களின் ஆவலை மேலும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரை வரும் அக்டோபர் 4ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இன்றுடன் (அக்டோபர் 1) சேர்த்து இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பஞ்ச் குறித்த ஒவ்வொரு சுவாரஷ்ய தகவல்களாக இணையத்தின் வாயிலாக கசிந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த செயல் ஒட்டுமொத்த வாகன உலகையுமே ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பட்ஜெட் வாகன பிரியர்கள் மத்தியில் இந்த காரின் வருகை அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கின்றது என்று கூறலாம். அந்தளவிற்கு பஞ்ச் காரின் வருகை மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பைத் தூண்டி உள்ளது.

அண்மையில் வெளியாகிய தகவல் ஒன்று, டாடா பஞ்ச் அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் பெரிய உருவத்தைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தியது. அதன் போட்டியாளர்கள் அல்லாத சில கார் மாடல்களை விடவும் பஞ்ச் பெரிய உருவம் கொண்டிருப்பது இந்த தகவலின் வாயிலாகவே தெரிய வந்தது. அந்தவகையில், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் மற்றும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஆகிய கார் மாடல்களைக் காட்டிலும் பெரிய உருவத்தில் பஞ்ச் உருவாகியுள்ளது.

இதன் அளவுகுறித்த விபரத்தை விரிவாக பட்டியலாகக் கீழே காணலாம்.
| Dimensions | Punch | KUV100 | Swift | Ignis | Grand i10 Nios |
| Length | 3840mm | 3700mm | 3845mm | 3700mm | 3805mm |
| Width | 1800mm | 1735mm | 1735mm | 1690mm | 1680mm |
| Height | 1635mm | 1655mm | 1530mm | 1595mm | 1520mm |
| Ground Clearance | 187mm | 170mm | 163mm | 180mm | 165mm |
| Wheelbase | 2450mm | 2385mm | 2450mm | 2435mm | 2450mm |

உருவத்தில் மட்டுமல்ல சிறப்பம்சங்களிலும் டாடா பஞ்ச் ஓர் தரமான தயாரிப்பாக காட்சியளிக்கின்றது. இந்த காரில் எல்இடி பகல்நேர மின் விளக்கு, புரஜெக்டர் ஹெட்லேம்ப், பனி விளக்கு, 8 ஸ்போக்குகள் கொண்ட இரட்டை நிற 16 அங்குல அலாய் வீல்கள் ஆகிய வசதிகள் இடம் பெற இருக்கின்றன. இத்துடன், ஐஆர்ஏ (iRA) கார் இணைப்பு வசதியும் பஞ்ச் காரில் வழங்கப்பட இருக்கின்றது.

இந்த இணைப்பு வசதியின் வாயிலாக 27க்கும் மேற்பட்ட அம்சங்களின் இணைப்பு வசதியை ஆப் வாயிலாக பெற முடியும். வாட்3வேர்ட்ஸ் (what3words) மற்றும் இயற்கையான குரல் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களையும் இதன் வாயிலாக டாடா மோட்டார்ஸ் வழங்க இருக்கின்றது. இதுபோன்ற ஏராளமான எதிர்பார்த்திராத அம்சங்களுடன் டாடா பஞ்ச் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இதுமட்டுமின்றி டாடா பஞ்ச் காரில் நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் ஒன்றான அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்கில் இடம் பெற்றிருப்பதைப் போல 90 டிகிரி திறக்கும் வசதிக் கொண்ட கதவுகள் வழங்கப்பட இருக்கின்றன. இது முதியவர்கள் எளிதில் ஏறி, இறங்க வசதியாக இருக்கும். டாடா நிறுவனம் அதன் ஆல்ஃபா (Agile Light Flexible Architecture) கட்டுமானத தளத்தில் வைத்தே பஞ்ச் காரை உருவாக்கியிருக்கின்றது.

இந்த தளம் கவர்ச்சியான மற்றும் பாதுகாப்பான கார்களை கட்டமைக்கும் பொருட்டு நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதற்கு மிக சிறந்த சான்று அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக். இந்த கார் மாடல் கவர்ச்சியான தோற்றத்திலும், பாதுகாப்பிலும் மிக சிறந்த வாகனமாக விளங்குகின்றது. பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்ற வாகனமே அல்ட்ராஸ் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த காரை உருவாக்கிய பிளாட்பாரத்தில் வைத்தே பஞ்ச் கார் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இதுவும் பாதுகாப்பு தரத்தில் நல்ல ரேட்டிங்கைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரில் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி வழக்கமான பாதுகாப்பு அம்சமாக இடம் பெற இருக்கின்றது.

மேலும், அல்ட்ராஸ், டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார் மாடல்களைப் போல 1.2 லிட்டர், 3 சிலிண்டர் எஞ்ஜினில் பஞ்ச் கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இத்துடன் டர்போசார்ஜட் எஞ்ஜின் தேர்வும் இந்த காரில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா பஞ்ச் ஒட்டுமொத்தமாமக ஆறு விதமான நிற தேர்வுகள் மற்றும் நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. வெள்ளை, சாம்பல், அர்பன், ப்ரோன்ஸே, ஆரஞ்சு, நீலம் மற்றும் ஸ்டோன்ஹெஞ்ஜ் எனப்படும் வெள்ளீயம் நிறம் என ஆறு விதமான நிற தேர்விலேயே பஞ்ச் விற்பனைக்கு வர இருக்கின்றது. மேலும், ப்யூர், அட்வென்சர், அக்காம்ப்ளிஷ்ட் மற்றும் கிரியேட்டீவ் ஆகிய ட்ரிம்களிலேயே பஞ்ச் கார் கிடைக்கும். இக்காருக்கான புக்கிங் பணிகள் அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்னரே ரூ. 5 ஆயிரம் முன்தொகையில் விற்பனையாளர்கள் சிலர் பஞ்சுக்கான புக்கிங்கை தொடங்கியிருக்கின்றனர்.
Source: Cartoq


Click it and Unblock the Notifications








