ஹோண்டா சிட்டிக்கு ஒரு கெட்ட செய்தி... சரிக்கு நிகரான புதிய மிட்சைஸ் செடான் காரை களமிறக்கும் ஸ்கோடா!
ஹோண்டா சிட்டிக்கு அனைத்து விதத்திலும் சரி நிகரான புதிய மிட்சைஸ் செடான் காரை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் களமிறக்க உள்ளது. இந்த காரின் அறிமுகம் குறித்தும் அதிகாரப்பூர்வானத் தகவல் வெளியாகி இருக்கிறது.

புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் இந்திய கார் சந்தையில் பல புதிய வர்த்தகத் திட்டங்களுடன் சுறுசுறுப்பாக செயலாற்றி வருகிறது ஸ்கோடா நிறுவனம். இந்த திட்டத்தின் கீழ் முதல் மாடலாக குஷாக் எஸ்யூவியை வரும் 28ந் தேதி ஸ்கோடா களமிறக்க உள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்து ஒரு புத்தம் புதிய கார் மாடலையும் இந்தியாவுக்கான பிரத்யேக அம்சங்களுடன் புராஜெக்ட் 2.0 திட்டத்தில் கொண்டு வர இருக்கிறது.

அதாவது, மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் புத்தம் புதிய கார் மாடலை இந்தியாவுக்கான பிரத்யேக அம்சங்களுடன் களமிறக்க உள்ளது. இதனை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுவரை ரேபிட் காருக்கு மாற்றாக புதிய செடான் கார் மாடலை ஸ்கோடா அறிமுகம் செய்ய இருப்பதாக கருதப்பட்டது. ஆனால், அது முற்றிலும் புதிய மிட்சைஸ் செடான் கார் மாடலாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

புதிய ரேபிட் கார் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று ஸாக் ஹொல்லிஸிடம் சமூக வலைத்தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஸாக் ஹொல்லிஸ், ரேபிட் காருக்கு மேலான ரகத்தில் புதிய மிட்சைஸ் செடான் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு இறுதியில் அந்த புத்தம் புதிய மிட்சைஸ் செடான் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரேபிட் காரை விற்பனையில் இருந்து விலக்குவதற்கான திட்டம் உள்ளதையும் ஸாக் ஹொல்லிஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.

புதிய ஸ்கோடா மிட்சைஸ் செடான் காரில் குஷாக் எஸ்யூவியின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளும், அதே கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர்த்து, ஏராளமான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

அதேநேரத்தில், புத்தம் புதிய ஸ்கோடா மிட்சைஸ் செடான் கார் மாடலானது, கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி காருக்கு மிக நேர் போட்டியாக இருக்கும். பரிமாணத்திலும், வசதிகளும் சரிக்கு நிகராக போட்டி போடும். மேலும், ரேபிட் காரைவிட விலை அதிகமான மிட்சைஸ் செடான் கார் மாடலாகவும் நிலைநிறுத்தப்படும்.

புதிய ஸ்கோடா மிட்சைஸ் செடான் கார் மாடலானது ஸ்லேவியா என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி தவிர்த்து, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு போட்டியாக அமையும்.
குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








