புதுசா நிறைய அம்சங்கள் கொடுத்திருக்காங்க! புதுப்பிக்கப்பட்ட Audi Q5 கார் விற்பனைக்கு அறிமுகம்!
ஆடி (Audi) நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் க்யூ5 (Audi Q5) சொகுசு கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த காரின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் அதுகுறித்த முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆடி (Audi) நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட க்யூ5 (Audi Q5) சொகுசு கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இக்காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் இன்று (நவம்பர் 23) ஆடம்பர கார் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற்றிருக்கின்றது. இக்காருக்கான புக்கிங்குகள் கடந்த இரண்டு மாதங்களாகவே நாட்டில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது.

2 லட்ச ரூபாய் முன் தொகையில் இக்காருக்கான முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வந்தன. இந்த நிலையிலேயே இறுதியாக தற்போது விற்பனைக்கான அறிமுகத்தை நிறுவனம் செய்துள்ளது. அறிமுக விலையாக சொகுசு காருக்கு ரூ. 58.93 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் விலை மட்டுமே ஆகும். ஆடி க்யூ5 சொகுசு கார் இந்திய சந்தையில் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

அதே நேரத்தில் எஞ்ஜின் தேர்வில் ஒற்றை பெட்ரோல் மோட்டார் தேர்வு மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. புதுப்பித்தல் விஷயங்களாக பல்வேறு மாற்றங்களை புதிய க்யூ5 எஸ்யூவி பெற்றிருக்கின்றது. அந்தவகையில், காரின் முகப்பு, பக்கவாட்டு மற்றும் பின் பகுதி என பல இடங்களில் மாற்றங்கள் காணப்படுகின்றன.

ஆடி க்யூ8 காரில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் சிலவும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. செங்குத்தாக நிற்கும் ஸ்லேட்டுகள் போன்ற தோற்றம் கொண்ட ஒற்றை ஃப்ரேம்ம ஆக்டகனோல் (octagonal) க்ரில், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட், 19 இன்ச் அளவுள்ள ஸ்போக் அலாய் வீல்கள், உருவம் மாற்றியமைப்பு செய்யப்பட்ட வால்பகுதி எல்இடி மின் விளக்குகள், குரோம் இன்செர்டுகள் மற்றும் பம்பர்கள் ஆகியவை இந்த வாகனத்தில் புதுப்பித்தலின்கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து ஆடி க்யூ5 காரை வேற லெவல் தோற்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றது. முந்தைய மாடலைக் காட்டிலும் பல மடங்கு கவர்ச்சியானதாகவும் இது காட்சியளிக்கின்றது. வெளிப்புறத்தைப் போலவே க்யூ5 உட்புறத்திலும் பல்வேறு மாற்றங்களைப் பெற்றிருக்கின்றது.

அந்தவகையில், புதிய தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், புதிய ஸ்டியரிங் வீல், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் முன்பக்க இருக்கைகள், ஆம்பிசியன்ட் மின் விளக்குகள், ஒயர்லெஸ் சார்ஜர், 40:20:40 அளவுகளில் பிரித்து வைக்கப்பட்ட பின்னிருக்கைகள் ஆகியவற்றை க்யூ5 இன் உட்புறம் பெற்றிருக்கின்றது.

இவற்றுடன், எலெக்ட்ரிக்களாக அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய வால்பகுதி கேட், முன்பக்கத்தில் பார்க்கிங் சென்சார், க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் பல சிறப்பு வசதிகளையும் இக்கார் பெற்றிருக்கின்றது. ஆடி க்யூ5 பிரீமியம் ப்ளஸ் (Premium Plus) மற்றும் தொழில்நுட்பம் (Technology) என்ற இருவிதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதில், பிரீமியம் ப்ளஸ் ட்ரிம்மிற்கு ரூ. 58.93 லட்சம் என்ற விலையும், டெக்னாலஜி ட்ரிம்மிற்கு 63.77 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு காரை நிறுவனம் சிகேடி முறையில் இறக்குமதி செய்து இந்தியாவில் செய்ய இருக்கின்றது. எனவேதான் இந்த உச்சபட்ச விலையில் க்யூ5 விற்பனைக்கு வந்திருக்கின்றது. மேலே பார்த்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைக் ஆகும்.

சொகுசு காரில் நிறுவனம் 2.0 லிட்டர் 45 டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் தேர்வை வழங்குகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 247 பிஎச்பி மற்றும் 370 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த எஞ்ஜினில் கூடுதல் சிறப்பு வசதியாக 12 வோல்ட் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது.

இத்துடன், பிரேக் ஆற்றல் மீட்பு (brake energy recuperation) தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் சேர்ந்து மிக சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்க உதவும். இக்காரில் டிரான்ஸ்மிஷன் வசதிக்காக 7 ஸ்பீடு எஸ்-ட்ரானிக் தானியங்கி ட்யூவல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றது. இத்துடன், நிறுவனத்தின் குவாட்ரா அனைத்து வீல் இயக்கும் சிஸ்டம் வழக்கமான அம்சமாக க்யூ5 காரில் வழங்கப்படுகின்றது. இதுபோன்ற பன்முக சிறப்பு வசதிகளை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே தனிப்பட்ட ரசிக பட்டாளம் இந்த காருக்கென இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








