ரொம்பவே ஸ்பெஷலான பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி... விரைவில் இந்தியா வருகிறது!
விசேஷ அம்சங்கள் கொண்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சொகுசு கார் மார்க்கெட்டில் மிகவும் உயரிய ரக எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான தேர்வை வழங்கும் விதத்தில் இந்த எஸ்யூவியின் லிமிடேட் எடிசன் மாடல் கடந்த ஆண்டு உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 டார்க் ஷேடோ எடிசன் என்று குறிப்பிடப்படும் இந்த புதிய மாடல் மிக விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை பிஎம்டபிள்யூ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.

உலக அளவில் மொத்தமாக 500 யூனிட்டுகள் மட்டுமே இந்த எக்ஸ்7 டார்க் ஷேடோ எடிசன் மாடல் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட்டுகள் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

பெயருக்கு ஏற்றாற்போல் இந்த எஸ்யூவி விசேஷ கருப்பு வண்ண உதிரிபாகங்களுடன் தனித்துவமான தேர்வாக வர இருக்கிறது. பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவியின் விலை உயர்ந்த எம்50ஐ வேரியண்ட்டின் அடிப்படையில் இந்த லிமிடேட் எடிசன் மாடல் கூடுதல் சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடலுக்கு இந்தியாவில் ரூ.1 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. அதாவது, சாதாரண எக்ஸ்-7 மாடலைவிட விலை கூடுதலாக இருக்கும்.

இந்த கார் பிராசன் ஆர்டிக் க்ரே என்ற விசேஷ மெட்டாலிக் வண்ணத் தேர்வில் வர இருக்கிறது. க்ரில் அமைப்பு, ரூஃப் ரெயில்கள், சைலென்சர் குழாய்கள் கருப்பு பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 22 அங்குல எம் லைட் அலாய் வீல்களும் கருப்பு வண்ணத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த காரின் உட்புறம் கருப்பு மற்றும் நீலம் என இரட்டை வண்ணக் கலவையில் இருக்கிறது. டேஷ்போர்டின் மேல் புறத்தில் நப்பா லெதர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிற இடங்களில் மெரினோ லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் பவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் டைமண்ட் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், பின்புற இருக்கை பயணிகளுக்கு பொழுது போக்கு வசதி, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, மசாஜ் வசதி, பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 டார்க் ஷேடோ எடிசன் மாடலில் 4.4 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 530 பிஎஸ் பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறனை இந்த எஸ்யூவி பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








