பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட அதிரடி... எலெக்ட்ரிக் வண்டி வாங்கினால் 1.50 லட்ச ரூபாய் தர்றாங்க!
எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் வரைவு எலெக்ட்ரிக் வாகன கொள்கையில், எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அது தற்போது 1.50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஒவ்வொரு கிலோவாட்டிற்கும் (kilowatt) 5 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். அவர்களுக்கு அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். அதே சமயம் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்களின் உரிமையாளர்களுக்கு ஒவ்வொரு கிலோவாட்டிற்கும் 10 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

இந்த வகையில் அதிகபட்சமாக 1.50 லட்ச ரூபாய் வரை எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்கள் மானியமாக பெற முடியும். இது முன்பு வெறும் 75 ஆயிரம் ரூபாயாக மட்டுமே இருந்தது. அதே நேரத்தில் எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள், எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் உள்ளிட்ட எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

அதே போல் முன்பு இவ்வளவு எலெக்ட்ரிக் கார்களுக்குதான் மானியம் என வரையறுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த உச்ச வரம்பும் நீக்கப்பட்டுள்ளது. இதுதவிர 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கும் வழங்கப்படுகிறது. முன்னதாக மேலும் ஒரு திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி சண்டிகர் நிர்வாகத்தால் நடத்தப்படும் வாகன ஸ்டாண்டுகளில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் விலக்கு வழங்குவது என்பதுதான் அந்த முன்மொழிவு. 5 ஆண்டுகளுக்கு இந்த சலுகை வழங்கப்படும். இந்த நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால் காற்று மாசுபாடு பிரச்னையும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவும் குறையும். எனவேதான் ஒன்றிய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை தற்போது வேகமாக ஊக்குவித்து வருகின்றன.

அரசாங்கம் மூலம் கிடைக்கும் ஆதரவு காரணமாகவும், பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வரும் ஆர்வம் காரணமாகவும் இந்தியாவில் தற்போது முன்னணி நிறுவனங்கள் பலவும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தற்போது களத்தில் குதித்துள்ளன.

சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களும் தற்போது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகளவில் கிடைக்கின்றன. ஆனால் இங்கு விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் முக்கியமானவையாக உள்ளன. எனினும் வரும் காலங்களில் இந்திய சந்தையில் நிறைய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளன.

ஹூண்டாய் நிறுவனம் மட்டும் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு இரண்டு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதில், ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஒன்று. மற்றொன்று ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் உள்ள கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்.

இதுதவிர டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளன. டாடா நிறுவனம் அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும், மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








