2021 Force Gurkha எஸ்யூவி வாகனத்தின் டீசர் வீடியோக்கள் வெளியீடு!! பின்பக்கத்தில் மட்டும் இத்தனை அம்சங்களா!
2021 ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 வாகனம் தொடர்பான புதிய டீசர் வீடியோக்கள் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புனேவில் இருந்தப்படி செயல்பட்டுவரும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் சந்தையில் 2021 குர்கா ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தை அறிமுகப்படுத்த பல மாதங்களாக தயாராகி வருகிறது.

இதற்கிடையில் புதிய தலைமுறை குர்கா வாகனம் தொடர்பான டீசர் படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் டீசர் படம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் வாகனத்தின் முன்பக்கம் காட்டப்பட்டு இருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில் புதிய குர்காவின் பின்பக்கம் வெளிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் வாகனத்தின் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள பாகங்கள் ஒவ்வொன்றும் ஹைலைட்டாக சுட்டி காட்டப்பட்டுள்ளன. முதன்முதலாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட குர்காவின் புதிய தலைமுறை மாடல் கடந்த 2020ஆம் வருடத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் பரவலினால் இதன் வருகையில் தாமதம் ஏற்பட்டது. இன்னும் சில மாதங்களுக்குள் இதன் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முற்றுலிலும் புதிய ஃபோர்ஸ் குர்கா வாகனம் அதன் முந்தைய தலைமுறையின் நன்கு மேம்படுத்தப்பட்ட பரிணாம வளர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோக்களில் ரீடிசைனில் பொனெட், புதிய டிசைனில் சுறா செவுள் போன்றதான வடிவில் ஃபெண்டர் மற்றும் காற்று ஏற்கக்கூடிய ஸ்னோர்கில் உள்ளிட்டவற்றை புதிய குர்கா மாடல் பெற்றுவரவுள்ளதை அறிய முடிகிறது. இதற்கு முன் கிடைத்திருந்த ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது, இந்த ஃபோர்ஸ் எஸ்யூவி வாகனம் அதன் பெட்டகம் வடிவத்தை தொடரவுள்ளது.

ஒற்றை-ஸ்லாட் க்ரில் உடன் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்களை பெற்றுவரவுள்ள புதிய குர்காவின் முன்பக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய பம்பர்கள், ஃபாக் விளக்குகள், இண்டிகேட்டர்களுடன் சிப்பி ஓடு போன்றதான வடிவில் பொனெட் முதலியவையும் பொருத்தப்பட உள்ளன.

இம்முறை ஃபோர்ஸ் குர்கா வாகனத்தை சுற்றிலும் புதியதாக கருப்பு நிற க்ளாடிங்குகள் பொருத்தப்பட உள்ளன. அதேபோல் செங்குத்தான வடிவிலான பின்கதவில் உதிரி சக்கரம் வழங்கப்பட உள்ளது. பின்பக்கத்தில் நிறுத்து விளக்கு நன்கு மேலாக பொருத்தப்பட்டுள்ளதை ஸ்பை படங்களில் பார்க்க முடிந்தது. உட்புறத்தில் 2021 ஃபோர்ஸ் குர்கா வாகனம் கருப்பு நிறத்திலான கேபினை பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் கேபினின் ஸ்பை படங்கள் கூட நமக்கு கிடைத்துள்ளன. அவற்றில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், கீழிறக்கி மேலேற்றும் வசதி கொண்ட ஜன்னல் கண்ணாடிகள், ஏபிஎஸ், இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், எதிரெதிரான பின் இருக்கைகள், பளபளப்பான கருப்பு நிறத்தில் ஏசி, மேனுவல் HVAC சிஸ்டம் உள்ளிட்டவற்றை புதிய குர்காவின் கேபினில் பார்க்க முடிந்தது.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2021 ஃபோர்ஸ் குர்கா ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தில் மெர்சிடிஸ்-பென்ஸின் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. தற்போதைய மாசு உமிழ்வு விதிகளுக்கு இணக்கமானதாக பிஎஸ்6 தரத்தில் வழங்கப்பட உள்ள இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது மேனுவல் 4x4 சிஸ்டத்துடன் நிலையாக இணைக்கப்பட உள்ளது. அத்துடன் ஆஃப்-ரோடு பயணத்திற்கான தொகுப்பையும் 2021 ஃபோர்ஸ் குர்காவில் எதிர்பார்க்கிறோம். இந்த தொகுப்பின் மூலம் சில ஆக்ஸஸரீகளை இந்த ஆஃப்-ரோடு வாகனம் பெற்றுவரவுள்ளது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ள மஹிந்திரா தார் எஸ்யூவி வாகனத்திற்கு போட்டியாக விளங்கும் ஃபோர்ஸ் குர்கா மாடலின் புதிய தலைமுறையில் தாரின் போட்டியினை சமாளிக்கும் விதத்தில் அத்தனை அம்சங்களும் இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதுமட்டுமில்லாமல், ஜப்பானில் விற்பனையில் உள்ள ஜிம்னி வாகனத்தை சுஸுகி நிறுவனம் இந்திய சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறது. இதனால் எதிர்காலத்தில் மஹிந்திரா தார் மட்டுமின்றி பல்வேறு முனைகளில் இருந்து ஃபோர்ஸ் குர்கா வாகனத்திற்கு போட்டி வரவுள்ளது.


Click it and Unblock the Notifications








