ஹூண்டாய் பிராண்டில் இருந்து வெளிவரும் அடுத்த இரு கார்கள்!! ஒன்றாக சோதனை ஓட்டம்...
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஹூண்டாய் ஐ20 என்-லைன் & அல்கஸார் கார்கள் இரண்டும் ஒன்றாக இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விரைவில் இந்திய சந்தைக்கும் செயல்திறன்மிக்க என்-லைன் கார்களை கொண்டுவரவுள்ளதாக தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் மறைப்புகளுடன் அல்கஸார் காரின் தோற்றம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது டீம் பிஎச்பி செய்திதளம் மூலமாக அல்கஸார் மற்றும் ஐ20 என் கார்கள் சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

இந்த சோதனை ஓட்டம் டெல்லியில் ஹூண்டாயின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு அருகே நடத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஐ20 என் கார் பின்பக்கத்தில் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்களையும், அளவில் பெரிய அலாய் சக்கரங்களையும் கொண்டிருக்கும்.

இதை வைத்து தான் தற்சமயம் விற்பனையில் உள்ள ஐ20 ஹேட்ச்பேக் காரில் இருந்து இதனை வேறுப்படுத்தி பார்க்க முடியும். இவை மட்டுமின்றி பெரிய முன்பக்க க்ரில், பெரிய காற்று ஏற்கும் டேம் உடன் திருத்தியமைக்கப்பட்ட பம்பர், பக்கவாட்டில் புதிய ஸ்கிர்ட்ஸ் மற்றும் சில்ஸ் என சற்று வித்தியாசமான உடற் பாகங்களை ஐ20 என் கார் பெறுகிறது.

'என்-லைன்' முத்திரையை முன்பக்க க்ரில்லில் பார்க்க முடியும். அத்துடன் காரை சுற்றிலும் பளிச்சிடும் ஹைலைட்களும் வழங்கப்படவுள்ளன. ஆனால் ஐ20 காரில் வழங்கப்படும் அதே 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தான் இந்த செயல்திறன்மிக்க மாடலிலும் வழங்கப்படும்.

ஐ20 காரில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆனால் ஐ20 என் காரில் எத்தகைய ஆற்றலை இந்த என்ஜின் வெளிப்படுத்தும் என்பது தெரியவில்லை.

அதேபோல் விலையும் எந்த அளவில் நிர்ணயிக்கப்படும் என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும் விற்பனையில் இருக்கும் மாடலை காட்டிலும் சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.

சரி அல்கஸாரின் பக்கம் போவோம், சமீபத்திய வெளியீட்டை தொடர்ந்து இந்த எஸ்யூவி காரை வரும் மாதங்களில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இது க்ரெட்டாவின் 6 அல்லது 7-இருக்கை வெர்சனாகும்.

புதிய 2.0 லிட்டர் நேச்சுரலில் அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படவுள்ள அல்கஸார் விற்பனையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








