மார்ச் மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு!! ஹூண்டாய் எலக்ட்ரிக் காரை வாங்குவோர் ரூ.1.5 லட்சம் வரையில் சேமிக்கலாம்
ஹூண்டாய் மோட்டார்ஸ் நடப்பு மார்ச் மாதத்திற்கான சலுகைகளை அதன் விற்பனை கார்களுக்கு அறிவித்துள்ளது. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை அறிவிப்பின்படி இந்த மார்ச் மாதத்தில் ஹூண்டாய் காரை வாங்குவோர் அதிகப்பட்சமாக ரூ.1,50,000 வரையில் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

அதிகப்பட்ச ரூ.1,50,000 தள்ளுபடி சலுகையினை ஹூண்டாய் மோட்டார்ஸின் எலக்ட்ரிக் கார் மாடலான கோனா இவி-யை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். தற்சமயம் கோனா எலக்ட்ரிக் காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.23.76 லட்சத்தில் இருந்து ரூ.23.95 லட்சம் வரையில் உள்ளன.

குறைந்தப்பட்சமாக விற்பனையில் கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் சோபிக்காத ஹூண்டாய் சாண்ட்ரோவை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக ரூ.50,000 வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த சலுகையை பெட்ரோல் என்ஜின் உடன் சாண்ட்ரோவை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த கார் சிஎன்ஜி வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. ஆனால் அவற்றிற்கு இந்த சலுகை பொருந்தாது. டீசல் என்ஜின் உடன் சாண்ட்ரோ விற்கப்படுவதில்லை. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரை ரூ.60,000 வரையிலான சலுகைகளுடன் இந்த மார்ச் மாதத்தில் வாங்கலாம்.

இது இந்த காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்கள் அனைத்திற்கும் பொருந்தும். சாண்ட்ரோவை போல் க்ராண்ட் ஐ10 நியோஸ் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கும் சலுகைகள் வழங்கப்படவில்லை. ஹூண்டாய் மோட்டார்ஸின் காம்பெக்ட் செடான் காரான அவ்ரா ரூ.70,000 வரையிலான சலுகைகளுடன் இந்த மாதத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

அவ்ரா செடானிற்கான இந்த சலுகை அதன் ஒரே ஒரு சிஎன்ஜி வேரியண்ட்டை தவிர்த்து மற்ற பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. ஹூண்டாய் எலண்ட்ரா நடுத்தர அளவு செடான் காரை வாங்குவோருக்கு ரூ.1 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சலுகைகளுடன் மேற்கூறப்பட்ட கார்களை வாங்கும் அரசாங்க ஊழியர்களுக்கென ரூ.8,000 எல்டிசி சலுகையையும் ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி மருத்துவ பணியாளர்களுக்கு, குறிப்பிட்ட கார்பிரேட் பணியாளர்களுக்கு, குறிப்பிட்ட பணியில் கைத்தேர்ந்தவர்களுக்கு மற்றும் சிஏ-களுக்கு சிறப்பு சலுகையினையும் ஹூண்டாய் நிறுவனம் வழங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications








