விற்பனையில் முன்னேற்றத்துடன் 2021ஐ தொடங்கும் ஹூண்டாய்!! 2021-லும் தொடருமா?
இந்தியாவில் உள்ள முன்னணி கார் பிராண்ட்களுள் ஒன்றான ஹூண்டாய் மோட்டார்ஸின் 2020 டிசம்பர் மாத விற்பனை நிலவரம் வெளிவந்துள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2020ஆம் ஆண்டில் எந்தவொரு மாதத்திலும் இல்லாத அளவில் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகளவிலான கார்களை தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது.

இதன் மூலமாக 2019 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் 24.89 சதவீத வளர்ச்சியை விற்பனையில் இந்த நிறுவனம் கண்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 47,400 ஹூண்டாய் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே ஹூண்டாயின் இந்திய தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு 19,350 கார்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவும் 2019 டிசம்பர் ஒப்பிடும்போது 33.14 சதவீதம் அதிகமாகும். மொத்தமாக கடந்த மாதத்தில் 66,750 ஹூண்டாய் கார்கள் இந்தியாவிலும், இந்தியாவில் இருந்து மற்ற உலக நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனை மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த டிசம்பரில் 71,178 கார் மாதிரிகளை ஹூண்டாய் நிறுவனம் அதன் இந்திய தொழிற்சாலைகளில் தயாரித்துள்ளது.

மொத்தமாக 2020-ஐ கணக்கெடுத்து பார்த்தோமேயானால் இந்த வருடத்தில் அதிகமாக எஸ்யூவி கார்களையே இந்த தென் கொரிய நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியாவில் க்ரெட்டா மற்றும் வென்யூ என்ற இரு எஸ்யூவி கார்களை ஹூண்டாய் நிறுவனம் தற்சமயம் விற்பனை செய்து வருகிறது.

இவை இரண்டு மட்டுமே 2020ல் 180,237 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 423,642 கார்களை ஹூண்டாய் நடந்து முடிந்த 2020ல் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டில் 98,900 கார்களை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளில் விற்பனை செய்துள்ளது.

இந்த எண்ணிக்கையின் மூலம் அதிகளவில் இந்தியாவில் இருந்து கார்களை ஏற்றுமதி செய்த நான்காவது நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 கார் கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் 8000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு 35,000க்கும் அதிகமான முன்பதிவுகள் ஏற்கப்பட்டுள்ளதால், இதன் விற்பனை வரும் மாதங்களிலும் அதிகமாகவே இருக்கும். மற்ற நிறுவனங்களை போல் ஹூண்டாயும் 2020ல் விற்பனையில் தடுமாற்றம் அடைந்தது உண்மைதான், ஆனால் இந்த நிலை 2021ல் மாறும் என ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் சிஇஒ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








