இந்தியாவுக்காக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்கள்... கியாவுடன் கூட்டணி... ஹூண்டாய் மாஸ்டர் பிளான் ரெடி!
இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு கணிசமாக உயர்ந்து வருவதையடுத்து, பெரிய அளவிலான முதலீட்டு திட்டத்தை ஹூண்டாய் மோட்டார்ஸ் கையில் எடுத்துள்ளது. கியா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மிக சவாலான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் பல புதிய மாடல்களை களமிறக்குவதற்கான திட்டங்களை வகுத்து விட்டது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம். இதற்காக ரூ.3,200 கோடியை முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதில், ரூ.1,000 கோடியை விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி களமிறக்குவதற்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கு 90 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்துவதற்கும் ஹூண்டாய் மோட்டார் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, போட்டியாளர்களை விட மிக சவாலான விலையில் எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியாவுக்கான எலெக்ட்ரிக் கார் மாடல்கள் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு ஹூண்டாய் இந்தியா நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.கிம் பேட்டி அளித்துள்ளார். அதில், உலக அளவில் விற்பனையில் உள்ள எங்களது எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்தியாவிலும் களமிறக்குவதற்கான முனைப்பில் உள்ளோம்.

அதேநேரத்தில், வாடிக்கையாளர்களுக்கு தோதுவான விலையில், போதிய தூரம் பயணிக்கும் திறன் கொண்டதாகவும் இருக்க விரும்புகிறோம். இதற்காக பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியாவுக்காக உருவாக்கப்படும் முதல் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் மாடலானது மினி எஸ்யூவி மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ரூ.10 லட்சத்திற்குள் இருக்கும். மஹிந்திரா இ-கேயூவி100 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வரிச்சலுகைகளையும் எலெக்ட்ரிக் கார்களுக்கு வழங்குகின்றன. இதனால், அடுத்து வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








