சத்தியமா நம்ப முடியல... இவ்வளவு குறைவான விலையில் டெஸ்லா காரா? விற்பனைக்கு வந்த உடனே வாங்கீர வேண்டியதுதான்!
டெஸ்லா நிறுவனம் மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. டெஸ்லா நிறுவனத்திற்கு மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் கார்களில் மாடல் 3 முதன்மையானதாக திகழ்கிறது. இந்த வரிசையில் டெஸ்லா நிறுவனம் மாடல் 2 என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் ஐடி.3, நிஸான் லீஃப் மற்றும் கியா இ-நிரோ உள்ளிட்ட கார்களுடன், டெஸ்லா மாடல் 2 கார் போட்டியிடும். தற்போதைய நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் மிகவும் பிரீமியமான செக்மெண்ட்டில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் டெஸ்லா மாடல் 2 எலெக்ட்ரிக் கார், விலை குறைந்த செக்மெண்ட்டில் டெஸ்லா நிறுவனம் நுழைவதற்கு உதவி செய்யும்.

டெஸ்லா மாடல் 2 எலெக்ட்ரிக் காரின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக 19 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு சில சந்தைகளில் மாடல் 3 எலெக்ட்ரிக் காரின் விலையில் இது பாதி விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் டெஸ்லா மாடல் 2 பெரும் வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டெஸ்லா மாடல் 2 எலெக்ட்ரிக் கார் வரும் 2023ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ப இந்த காரின் உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படலாம். சரி, டெஸ்லா நிறுவனத்தால் இந்த அளவிற்கு விலை குறைவான காரை எப்படி விற்பனைக்கு கொண்டு வர முடியும்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

டெஸ்லா நிறுவனம் தற்போது புதிய பேட்டரி தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி வருகிறது. இதன் மூலமாக உற்பத்தி செலவு 50 சதவீதம் வரை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் இந்த புதிய பேட்டரி தொழில்நுட்பம் மூலம் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ச் 16 சதவீதம் வரை அதிகரிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெஸ்லா நிறுவனத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால், விலை குறைவான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியம் என டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கடந்த காலங்களில் கூறியுள்ளார் என்பதை இங்கே நினைவு கூறலாம். டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைவதற்கு தயாராகி வருவது நம் அனைவருக்குமே தெரியும்.

இந்தியாவை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே இங்கு விலை குறைவான காரை களமிறக்கினால், நல்ல வரவேற்பு கிடைக்கும். எனவே டெஸ்லா நிறுவனம் மாடல் 2 எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும்பட்சத்தில், அது இந்தியாவிற்கும் கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லாத காரணத்தால், அதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டெஸ்லா நிறுவனம் நடப்பாண்டு இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை தொடங்கும் என கூறப்படுகிறது. இங்கு டெஸ்லா நிறுவனத்தின் முதல் காராக மாடல் 3 அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








