கியா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... வளர்ச்சியா? வீழ்ச்சியா?
கியா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது? என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் கியா நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தது. அப்போதில் இருந்து கியா தற்போது வரை கியா நிறுவனத்தின் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. கியா நிறுவனம் தற்போதைய நிலையில் செல்டோஸ், கார்னிவல் மற்றும் சொனெட் என இந்திய சந்தையில் மொத்தம் மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக இந்திய சந்தையில் 11,818 கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கியா நிறுவன கார்களின் விற்பனை 154.42 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கியா நிறுவனம் வெறும் 4,645 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இது மிக பிரம்மாண்டமான விற்பனை வளர்ச்சியாகும். ஆனால் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கியா நிறுவனம் செல்டோஸ் என்ற ஒரு ஒரு மாடலைதான் இந்திய சந்தையில் விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது கியா நிறுவனம் விற்பனை செய்யும் மாடல்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

ஆனால் 2020ம் ஆண்டு நவம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால், 2020ம் ஆண்டு டிசம்பரில் கியா நிறுவனம் 43.78 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஏனெனில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் கியா நிறுவனம் இந்தியாவில் 21,022 கார்களை விற்பனை செய்திருந்தது. பண்டிகை காலம் நிறைவடைந்ததால் டிசம்பர் மாதத்தில் கார்களின் விற்பனை குறைந்திருக்கலாம்.

இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் தயாரிப்பான செல்டோஸ் ஆரம்பத்தில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வந்தது. ஆனால் புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டாவின் வருகைக்கு பின் கியா செல்டோஸ் எஸ்யூவியின் விற்பனை சற்றே பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த இரண்டாவது தயாரிப்பு கார்னிவல் எம்பிவி ஆகும். தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் முதன்மையான மாடல் இதுதான். கியா கார்னிவல் எம்பிவி சொகுசு வாகனமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதில், ஏராளமான பிரீமியம் வசதிகள் வழங்கப்படுகின்றன.

கியா கார்னிவல் எம்பிவிக்கு இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நேரடி போட்டி என எந்த காரும் இல்லை. ஆனால் கியா செல்டோஸ் மற்றும் சொனெட் கார்களை விட இது விலை உயர்ந்த கார் என்பதால், விற்பனை எண்ணிக்கை குறைவாகதான் இருந்து வருகிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த மூன்றாவது கார் சொனெட்.

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரான சொனெட் விற்பனையில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, டொயோட்டா அர்பன் க்ரூஸர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு வந்த நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார்களுக்கு கடும் சவால் அளித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








