ஒரு பக்கம் பிரம்மாண்ட வளர்ச்சி... ஒரு பக்கம் வீழ்ச்சி... கியா நிறுவனத்தின் மே மாத சேல்ஸ் ரிப்போர்ட்...
கடந்த மே மாதத்திற்கான கியா இந்தியா நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கியா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் மூன்று கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. எனினும் அந்த மூன்று கார்களுக்குமே நல்ல வரவேற்பு இருப்பதால், ஒவ்வொரு மாதமும் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை கியா நிறுவனம் பதிவு செய்து வருகிறது. இதன்படி கடந்த மே மாதம் கியா நிறுவனம் இந்தியாவில் 11,050 கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் கியா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 1,661 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் 565.26 சதவீதம் என்ற மிக பிரம்மாண்டமானதொரு வளர்ச்சியை கியா நிறுவனம் பதிவு செய்துள்ளது. ஆனால் இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு பின்னால் முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.

2020ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் முதல் அலை பிரச்னையால் இந்தியா பாதிக்கப்பட்டிருந்தது. எனவே அப்போது கடுமையான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக அப்போது கார்களின் விற்பனை மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதுவே தற்போதைய பிரம்மாண்ட வளர்ச்சிக்கு முக்கியமான காரணம்.

ஆனால் உண்மையில் கடந்த மே மாதம் கார் விற்பனை சற்று குறைந்துள்ளது. கடந்த மே மாத விற்பனையை அதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால் கியா நிறுவனத்திற்கு ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் கியா நிறுவனம் இந்திய சந்தையில் 16,111 கார்களை விற்பனை செய்து அசத்தியிருந்தது.

இந்த வகையில் பார்த்தால் அதன் பின் வந்த மே மாதத்தில் கியா நிறுவன கார்களின் விற்பனை 31.41 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் இந்த சரிவிற்கு பின்னாலும் காரணம் உள்ளது. அதுவும் ஊரடங்குதான். இந்தியாவில் கடந்த மே மாதம் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக அமலில் இருந்தன.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் பாதிப்பு இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால், தற்போதுதான் பெரும்பாலான மாநில அரசுகள் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து கொண்டுள்ளன. தமிழகத்தை எடுத்து கொண்டால், இன்னமும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்குதான் அமலில் உள்ளது.

இதன் காரணமாகதான் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது அதன்பின்னர் வந்த மே மாதத்தில் விற்பனை குறைந்துள்ளது. இதற்கிடையே கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு மே மாதம் கியா நிறுவன கார்களின் விற்பனை பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்திருப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.

கடந்தாண்டு மே மாதத்தில் கியா நிறுவனம் செல்டோஸ், கார்னிவல் ஆகிய இரண்டு கார்களை மட்டுமே விற்பனை செய்து வந்தது. அதன்பின்னர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம்தான் சொனெட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது சொனெட்டின் விற்பனை சிறப்பாக உள்ளது. நடப்பாண்டின் மே மாதத்தில் கியாவின் விற்பனை உயர்ந்திருப்பதற்கு சொனெட்டின் வருகையும் ஒரு காரணம்.


Click it and Unblock the Notifications








