சுண்டி இழுக்கும் டிசைன்... புதிய கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் படங்கள் வெளியீடு!
கியா மோட்டார் நிறுவனத்தின் இவி6 என்ற புத்தம் புதிய எலெக்ட்ரிக் காரின் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த காரின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் மின்சார கார்களுக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக பிளாட்ஃபார்மில் புதிய கார் மாடல்களை உருவாக்க முனைந்துள்ளது. அதாவது, கியா மோட்டார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் எதிர்கால தேவையை கருதி, இந்த புதிய மின்சார கார் பிளாட்ஃபார்மை உருவாக்கி இருக்கிறது. எலெக்ட்ரிக் குளோபல் மோடுலர் பிளாட்ஃபார்ம் (e-GMP) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.
இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட முதல் ஹூண்டாய் மின்சார கார் மாடலாக ஐயோனிக் 5 அண்மையில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது கியா மோட்டார் நிறுவனமும் இந்த புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட முதல் கார் மாடலின் படங்களை வெளியிட்டு இருக்கிறது.

கியா EV6 என்ற பெயரில் இந்த புதிய மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாத இறுதியில் முறைப்படி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த காரின் டிசைன் முற்றிலும் புதிதாக மாறி இருக்கிறது.

அதாவது, கியா மோட்டார் நிறுவனத்தின் புதிய டிசைன் மொழியில்தான் இந்த கார் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் க்ராஸ்ஓவர் டிசைன் பார்ப்போரை சுண்டி இழுக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த காரில் முக்கிய அம்சமாக கியா மோட்டார் நிறுவனத்தின் புதிய லோகோ இடம்பெற்றுள்ளது. கூர்மையான ஹெட்லைட் க்ளஸ்ட்டர்களை இணைக்கும் வகையில் மெல்லிய க்ரில் அமைப்பு கொடுக்கப்ட்டு இருக்கிறது. அதாவது, வழக்கமான புலிமூக்கு வடிவிலான க்ரில் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. பம்பர் பெரிதாக தெரிகிறது. ஏர்டேம் பகுதி மீன்களின் திறந்த வாய் பகுதியை நினைவூட்டுவது போன்று இருக்கிறது.

பக்கவாட்டில் அசத்தும் வடிவிலான அலாய் வீல்கள், வலிமையான வீல் ஆர்ச்சுகள், பாடி லைன்களுடன் கவர்கிறது. கூரை அமைப்பு பின்புறம் லேசாக தாழ்ந்து உள்ளது. பின்புற டிசைன் ஜாகுவார் ஐ-பேஸ் காரை நினைவூட்டுவது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரின் உட்புறம் மிக தாராளமான இடவசதியை அளிக்கும் என்று கியா மோட்டார் தெரிவித்துள்ளது. பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. உட்புறம் நவீனயுக கார் மாடலுக்கு உரிய டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் வருவது உறுதியாகி இருக்கிறது.
ஹூண்டாய் ஐயோனிக் 5 காரிலிருந்து வேறுபட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் வரும் என்று தெரிகிறது. இந்த காரில் ஒற்றை மின் மோட்டார் அல்லது இரண்டு மின் மோட்டார்கள் கொண்ட மாடல்களில் வரும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த காரின் மின் மோட்டார் மற்றும் பேட்டரித் தொகுப்பு இணைந்து 300 எச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒருமுறை முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்தால் 480 கிமீ தூரம் வரை செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் இந்த காரின் அனைத்து விபரங்களும் இந்த மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








