கைவசம் 3 தயாரிப்புகள் மட்டுமே இருக்கும் நிலையில் அசத்தல்... கியா கார்களின் விற்பனை கிடுகிடு உயர்வு...
இந்திய சந்தையில் கியா நிறுவன கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த மார்ச் மாதத்திற்கான தனது சேல்ஸ் ரிப்போர்ட்டை கியா மோட்டார் இந்தியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த மார்ச் மாதம் கியா மோட்டார் நிறுவனம் 19,100 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 122.53 சதவீத வளர்ச்சியாகும்.

ஏனெனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கியா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 8,583 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதேபோல் நடப்பாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிட்டாலும் கியா நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் கியா நிறுவனம் இந்தியாவில் 16,702 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஆனால் அதன்பின் வந்த மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 19,100 ஆக உயர்ந்துள்ளது. இது 14.36 சதவீத வளர்ச்சியாகும். தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் கியா 4வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

கியா நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வெறும் மூன்று கார்களை மட்டும் வைத்து கொண்டு, கியா நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களை இந்த அளவிற்கு கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகிய 3 கார்களை மட்டுமே கியா விற்பனை செய்து வருகிறது.

இதில், செல்டோஸ்தான் முதன் முதலில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கியா நிறுவனத்தின் கார் ஆகும். எஸ்யூவி ரக காரான இது, ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக கார்னிவல் எம்பிவி காரையும், சொனெட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரையும் கியா விற்பனைக்கு கொண்டு வந்தது.

இதில், கார்னிவல் பிரீமியம் எம்பிவி கார் ஆகும். விலை உயர்ந்த கார் என்பதால், அதன் மாதாந்திர விற்பனை எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எஞ்சிய 2 கார்களான செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய இரண்டு எஸ்யூவி கார்களும்தான் ஒவ்வொரு மாதமும் கியா நிறுவனத்திற்கு பெரும் விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன.

கியா நிறுவனம் அடுத்ததாக செல்டோஸ் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அனேகமாக புதிய செல்டோஸ் எஸ்யூவி நடப்பு மாதமே விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய மாடலில், கியா நிறுவனம் ஒரு சில வசதிகளை கூடுதலாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் வருகை, கியா செல்டோஸ் எஸ்யூவியின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கூடுதல் வசதிகளுடன், புதிய மாடலை அறிமுகம் செய்வதன் மூலம் செல்டோஸ் எஸ்யூவியின் விற்பனையை அதிகரிக்க முடியும் என கியா மோட்டார் இந்தியா நிறுவனம் நம்புகிறது.


Click it and Unblock the Notifications








