மஹிந்திரா எக்ஸ்யூவி300 பெட்ரோல் மாடலிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் விரைவில் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கடும் சந்தைப் போட்டி நிலவுகிறது. புதிய மாடல்களின் வருகையால் ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடல்களின் மதிப்பை உயர்த்தும் முயற்சிகளில் சம்பந்தப்பட்ட கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், சப்-காம்பேக்ட் எஸ்யூவிகளில் மிகவும் பிரிமீயம் அம்சங்கள் கொண்ட மாடலாக இருந்து வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியும் சந்தைப் போட்டியால் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.

இதனை மனதில் வைத்து எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மதிப்பை உயர்த்துவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. அதன்படி, எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வையும் மிக விரைவில் வழங்குவதற்கு மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 110 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மறுபுறத்தில் இந்த எஸ்யூவியின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 117 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த இரண்டு எஞ்சின் தேர்வுகளுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. டீசல் மாடலில் மட்டும் ஆப்ஷனலாக 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், பெட்ரோல் மாடலிலும் இப்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் 17 அங்குல அலாய் வீல்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் 7 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா, முன்புற, பின்புற பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், கார்னர் பிரேக்கிங் கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.7.94 ல்சம் முதல் ரூ.11.11 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் மாடல் ரூ.8.69 லட்சம் முதல் ரூ.12.29 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.
Via- Gaadiwaadi


Click it and Unblock the Notifications








