நான்காவது ஆண்டாக தொடரும் ஆதிக்கம்... டாப் 5 இடத்தை ஆக்கிரமித்த மாருதி தயாரிப்புகள்... ஆச்சரியத்தில் சந்தை!!
அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதல் 5 இடங்களை மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் பிடித்துள்ளன. இந்த இடத்தை தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக மாருதியின் ஆதிக்கம் நீடிப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால், இந்திய வாகன சந்தையே வியப்பில் ஆழ்ந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

2020-21ஆம் நிதியாண்டில் நாட்டில் அதிகம் விற்பனையான கார்கள் எது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில் நாட்டில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் தன் நிறுவனத்தின் தயாரிப்புகளே டாப் ஐந்து இடங்களை பிடித்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இதுபோன்று முன்னணி இடத்தில் பெரும்பான்மையுடன் மாருதி சுசுகி நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவது இது முதல் முறையல்ல. கடந்த 4 ஆண்டுகளாகவே இந்நிறுவனம் இவ்வாறுதான் முன்னணி இடங்களைப் பிடித்து வருகின்றது. அதாவது, டாப் 5 அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகளே பிடித்து வருகின்றன.

எந்த கார் முதல் இடம்?
நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மவுசு குறையாமல் இருப்பது இந்திய வாகன சந்தையில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

1,72,671 யூனிட்டுகளுக்கான விற்பனையைப் பெற்று ஸ்விஃப்ட் கார் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பலினோ ஹேட்ச்பேக் கார் பிடித்துள்ளது. இக்கார், 1,63,445 யூனிட்டுகளை விற்பனைச் செய்து இவ்விடத்தைப் பிடித்திருக்கின்றது.

இதற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தை வேகன் ஆர் ஹேட்ச்பேக் கார் பிடித்திருக்கின்றது. 1,60,330 யூனிட்டுகள் வரை கடந்த ஆண்டில் விற்பனைச் செய்து இவ்விடத்தை வேகன் ஆர் பிடித்துள்ளது. தொடர்ந்து, நான்காம் இடத்தை ஆல்டோவும், ஐந்தாம் இடத்தை டிசையர் காரும் பிடித்துள்ளன.

இதில், ஆல்டோ கார் மாடல் ஒட்டுமொத்தமாக 1,58,992 யூனிட்டுகளையும், டிசையர் 1,28,251 யூனிட்டுகளையும் விற்பனைச் செய்திருக்கின்றது. இந்த மாடல்கள் மட்டுமே நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 30 சதவீதத்தை பிடித்துள்ளன. இவற்றினாலயே 2020-21 நிதியாண்டில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியில் மாருதி தொடர்ச்சியாக தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றது.

அண்மையில் மாருதி சுசுகி பலினோ கார் கற்பனையில் எட்டாத வகையில் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியதாக நிறுவனம் அறிவித்திருந்தது. இக்கார் 5.5 வருடத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகியிருந்ததாக நிறுவனம் கூறியிருந்தது.

இது இரண்டு நிமிடங்களுக்கு ஓர் பலினோ கார் விற்பனையாவதற்கு சமம் என மிக பெருமையுடன் நிறுவனம் கூறியிருந்தது. இந்த நிலையிலேயே டாப்5 கார்கள் பற்றிய தகவலையும் வெளியிட்டு நிறுவனம் மீண்டும் பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








