மாருதி சுஸுகியின் முன்னணி மாடல்கள் விற்பனையில் வீழ்ச்சியடைந்த சமயத்தில் கெத்து காட்டிய சியாஸ்...
மாருதி சுஸுகி சியாஸ் காரின் விற்பனை உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2021ம் ஆண்டை பெரும்பாலான கார் நிறுவனங்கள் வளர்ச்சியுடன் தொடங்கியுள்ளன. ஆனால் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, விற்பனை வீழ்ச்சியுடன் 2021ம் ஆண்டை தொடங்கியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல்டோ, ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் டிசையர் உள்ளிட்ட கார்கள், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில், 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

எனினும் கடந்த ஜனவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் சியாஸ் விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் வெறும் 835 சியாஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை 1,347 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் விற்பனையில் 61.32 சதவீத வளர்ச்சியை மாருதி சுஸுகி சியாஸ் பதிவு செய்துள்ளது. அதே சமயம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டாலும், 2021ம் ஆண்டு ஜனவரியில் மாருதி சுஸுகி சியாஸ் காரின் விற்பனை உயர்ந்துள்ளது. ஏனெனில் 2020ம் ஆண்டு டிசம்பரில் மாருதி சுஸுகி நிறுவனம் 1,270 சியாஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 6.06 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை டீசல் இன்ஜின் தேர்வுடனும் மாருதி சுஸுகி சியாஸ் கிடைத்து வந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது தற்போது டீசல் இன்ஜின் தேர்வு இல்லாத நிலையிலும் சியாஸ் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதற்கிடையே வரும் மாதங்களில் மீண்டும் டீசல் இன்ஜின் தேர்வுகளை வழங்க மாருதி சுஸுகி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, மாருதி சுஸுகி நிறுவனம் 1.5 லிட்டர் DDiS இன்ஜினை, பிஎஸ்-6 அவதாரத்தில் மீண்டும் கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. பிஎஸ்-4 வடிவத்தில், இந்த இன்ஜின் அதிகபட்சமாக 95 பிஎஸ் பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருந்தது. இந்த இன்ஜின் முதலில் சியாஸ், எர்டிகா கார்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் அதன் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடலான டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய மாடல்களிலும் இந்த இன்ஜின் தேர்வு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் அடிப்படையில் இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரையும், டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி சியாஸ் கார், 1.5 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-4 பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் மட்டுமே கிடைக்கிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என மொத்தம் இரண்டு டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் மாருதி சுஸுகி சியாஸ் கிடைக்கிறது. இதே இன்ஜின்-கியர்பாக்ஸ் தேர்வுகள்தான், விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல்-6 மற்றும் எஸ்-க்ராஸ் ஆகிய கார்களிலும் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








