கை கொடுத்த விழாக் காலம்... புதிய விற்பனை வளர்ச்சியில் மாருதி சுசுகி... இந்த கார்களே அதிகம் விற்பனையானவை!!
2020 டிசம்பர் மாத விற்பனை தகவலை மாருதி சுசுகி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. எத்தனை சதவீதம் இந்நிறுவனம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

கடந்த 2020ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் எத்தனை கார்களை விற்பனைச் செய்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் முந்தைய 2019ம் ஆண்டிம் டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் கடந்த 2020 டிசம்பரில் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

19.5 சதவீத விற்பனை வளர்ச்சியை அது பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உள்நாட்டு சந்தையில் ஒட்டுமொத்தமாக 1,50,288 யூனிட் மாருதி வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதுவே, முந்தைய 2019ம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனைப் பார்த்தோமேயானால் 1,25,735 யூனிட் மாருதி வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றது.

தற்போதைய அதீத விற்பனை வளர்ச்சிக்கு பண்டிகை நாட்களும், மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்த சிறப்பு சலுகைத் திட்டங்களே காரணமாக இருக்கின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் மினி கார்களே அதிகம் விற்பனையாகியிருக்கின்றன. ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ கார்களினாலயே மாருதி சுசுகி நிறுவனம் கடந்த ஆண்டின் இறுதி மாதத்தில் நல்ல விற்பனை எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றது.

இதேபோன்று, காம்பேக்ட் ரக கார்களான ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலினோ மற்றும் டிசையர் ஆகிய கார்களின் விற்பனையும் 18.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 77,641 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதுவே, 2019 டிசம்பரில் மேற்கூறிய மாடல்கள் மொத்தமாகவே 65,673 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன.

இதேபோன்று விட்டாரா ப்ரெஸ்ஸா, எஸ்-க்ராஸ் மற்றும் எர்டிகா கார்களின் விற்பனையும் வளர்ச்சியுடன் காணப்படுகின்றது. இந்த கார்கள் 8 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. 2019 டிசம்பரில் 23,808 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. ஆனால், 2020 டிசம்பரில் 25,701 யூனிட் வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன.

இதில் சற்று வித்தியாசமாக, மிட் சைஸ் செடான் ரக கார் மாடலான சியாஸ் மட்டும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றது. இருப்பினும், இதன் வீழ்ச்சி மாருதி நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இக்கார் 28.1 சதவீதம் விற்பனை வீழ்ச்சியைப் பெற்றிருக்கின்றது. கடந்த 2019ம் ஆண்டில் 1,786 யூனிட் விற்பனையாகியிருந்த கார் 2020 டிசம்பரில் 1,270 யூனிட்டுகள் மட்டுமே விற்றிருக்கின்றன.

ஏற்றுமதி; உள்நாட்டு விற்பனையைப் போலவே ஏற்றுமதியிலும் மாருதி நல்ல வளர்ச்சியைச் சந்தித்திருக்கின்றது. 31.4 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக கடந்த டிசம்பர் மாத்தில் 7,561 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்து இந்த சதவீதத்தை அது பெற்றிருக்கின்றது.

இவையனைத்தையும் ஒன்றுகூட்டி பார்த்தால் (உள் மற்றும் வெளி நாட்டிற்கான ஏற்றுமதி) மாருதி நிறுவனம் 20.2 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பது தெரிய வருகின்றது. இது நல்ல விற்பனை வளர்ச்சியாகும்.


Click it and Unblock the Notifications