மாருதி சுஸுகியால் மட்டும் இது எப்படி முடியுது!! 2021 ஜனவரியில் 1.39 லட்ச கார்களை விற்றுள்ளது!
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் கடந்த ஜனவரியில் 1,39,002 கார்களை நம் நாட்டில் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020 ஜனவரியில் விற்பனையான மாருதி கார்களுடன் ஒப்பிடுகையில் வெறும் 0.6 சதவீதம் மட்டுமே குறைவாகும்.

ஏனெனில் அந்த மாதத்தில் 1,39,844 மாருதி கார்கள் விற்பனையாகி இருந்தன. அதேபோல் மாருதியின் 2021 ஜனவரி மாத விற்பனையும் அதற்கு முந்தைய 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் 1.2 சதவீதம் குறைவாகும்.

கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனையான மாருதி காராக மட்டுமில்லாமல் ஒட்டு மொத்தத்தில் வாடிக்கையாளர்கள் அதிக பேரால் வாங்கப்பட்ட கார் மாடலாக ஆல்டோ ஹேட்ச்பேக் உள்ளது. இதன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 18,260 ஆகும்.

இருப்பினும் 2020 ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை 3 சதவீதம் குறைவு. கொரோனா பரவல் சீனாவில் மட்டுமே இருந்த அந்த மாதத்தில் 18,914 ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆல்டோவிற்கு அடுத்து அதிகளவில் விற்பனையான இரண்டாவது மாருதி காராக ஸ்விஃப்ட் உள்ளது.

இந்த ஹேட்ச்பேக் காரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 17,180 ஆகும். அதுவே கடந்த ஆண்டு ஜனவரியில் 19,981 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்த காரின் விற்பனையில் 14 சதவீத சறுக்கலை மாருதி நிறுவனம் கண்டுள்ளது.

ஆனால் உயரமான ஹேட்ச்பேக் காரான வேகன்ஆரின் விற்பனையில் இந்த நிறுவனம் 13 சதவீத முன்னேற்றத்தை பார்த்துள்ளது. 2021 ஜனவரியில் 17,165 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ள வேகன்ஆர் 2020 ஜனவரியில் 15,232 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

விற்பனை போட்டி மிகுந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் ஐ20, அல்ட்ராஸ் போன்ற பிரபலமான கார்களுக்கு எதிராக விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி பலேனோ கடந்த மாதத்தில் 16,648 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. ஆனால் 2020 ஜனவரியில் இதன் விற்பனை 20 ஆயிரத்தை கடந்திருந்தது.

அதேபோல் கடந்த ஜனவரி மாதத்தில் 22 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டிசைர் காம்பெக்ட் செடானின் விற்பனையும் 32 சதவீதம் குறைந்து 15,125 யூனிட்களே விற்பனையாகி உள்ளது. இவை ஐந்தும் தான் எல்லா பிராண்ட்களையும் சேர்த்து கடந்த 2021 ஜனவரி மாதத்தில் அதிகளவில் விற்பனையான டாப்-5 கார்களாகும்.

இவற்றிற்கு அடுத்து 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ள ஈக்கோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை கூட 10 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்களில் மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எம்பிவி காராக தற்சமயம் உள்ள எர்டிகா இந்த லிஸ்ட்டில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

இதன் விற்பனை 2020 ஜனவரியை காட்டிலும் சுமார் 91 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் மாருதி ப்ரீமியம் எம்பிவி கார் மாடலான எக்ஸ்எல்6-இன் விற்பனையும் 305 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு யூனிட் கூட விற்பனை செய்யப்படாத இக்னிஸை கடந்த மாதத்தில் 3,854 யூனிட்கள் மாருதி விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








