டீசல் இன்ஜின் இல்லாத நிலையிலும் விற்பனையில் கெத்து காட்டும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா!
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனை உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த ஜனவரி மாதத்திற்கான தனது சேல்ஸ் ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. வழக்கம் போல மற்ற நிறுவனங்களை காட்டிலும் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆதிக்கம் தொடர்வது இதன் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா 10வது இடத்தை பிடித்துள்ளது.

மொத்தம் 10,623 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 10,134 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் 4.82 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதே சமயம் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் விற்பனை 13.28 சதவீதம் குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில், மாருதி சுஸுகி நிறுவனம் 12,251 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா 1.3 லிட்டர் டீசல் இன்ஜினுடன் மட்டுமே கிடைத்து வந்தது.

அதை தொடர்ந்து 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி சுஸுகி நிறுவனம் டீசல் இன்ஜின்களை விற்பனையில் இருந்து விலக்கி விட்ட நிலையில், இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு மட்டும் வழங்கப்பட்டது.

டீசல் இன்ஜினை விற்பனையில் இருந்து விலக்கிய நிலையிலும், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2021ம் ஆண்டு ஜனவரியில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினானது, நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்லைன்-4 யூனிட் ஆகும்.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இது இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும்.

ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், நிஸான் மேக்னைட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா போட்டியிட்டு வருகிறது. அத்துடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கைகர் காருக்கும், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் சவால் அளிக்கும்.

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் அடுத்த தலைமுறை மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய தலைமுறை மாடல் இந்திய சந்தையில் 2022ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








