விற்பனையில் இமாலய சாதனையை படைத்த மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா... என்னனு தெரியுமா?
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் இமாலய சாதனையை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் பிரபலமான காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்று விட்டாரா பிரெஸ்ஸா. இந்திய சந்தையில் 6 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை விட்டாரா பிரெஸ்ஸா கடந்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை என்பதில் சந்தேகமில்லை.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் இந்திய சந்தையில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 1 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விட்டாரா பிரெஸ்ஸா கடந்தது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் 2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்து விட்டாரா பிரெஸ்ஸா அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதன்பின் 3 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கலை கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதமும், 4 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் விட்டாரா பிரெஸ்ஸா வெற்றிகரமாக கடந்தது. இதை தொடர்ந்து 5 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் விட்டாரா பிரெஸ்ஸா கடந்தது.

6 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல் நடப்பாண்டு ஜனவரியில் கடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகி வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளது. ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், சமீபத்தில் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் ஆகியவை இதன் முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.

இதுதவிர டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடனும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா போட்டியிட்டு வருகிறது. இந்த செக்மெண்ட்டில் உள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் அடிப்படையில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரில் ஒரு சில மாற்றங்களை செய்து, டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் விற்பனை செய்து கொண்டுள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் விற்பனையும் இந்தியாவில் ஓரளவிற்கு சிறப்பாகவே இருந்து வருகிறது.

இதற்கிடையே 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் கே15பி மைல்டு-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் உடன் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டது. இதற்கு முன்பாக மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரில், 1.3 லிட்டர் நான்கு-சிலிண்டர் டிடிஐஎஸ் 200 டீசல் இன்ஜின் வழங்கப்பட்டது.

90 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 104.7 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








