இந்தியாவில் முதல் முறையாக நடந்த அதிசயம்... விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனத்தை வீழ்த்திய ஹூண்டாய் குரூப்...
ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் இணைந்து விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனத்தை வீழ்த்தியுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா மற்றும் ஹூண்டாய் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து, விற்பனை எண்ணிக்கையில் முதல் முறையாக இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியை வீழ்த்தியுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு அங்கமாகதான் கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த மே மாதம் ஹூண்டாய் மற்றும் கியா இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து 36,051 கார்களை விற்பனை செய்துள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 8,544 ஆக மட்டுமே இருந்தது. இது 322 சதவீத வளர்ச்சியாகும். அதே சமயம் மாருதி சுஸுகி நிறுவனம் (அரேனா + நெக்ஸா) கடந்த மே மாதம் 32,903 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 13,702 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனையில் 140 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. என்றாலும் விற்பனை எண்ணிக்கையில் ஹூண்டாய் மற்றும் கியா 2 நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து, மாருதி சுஸுகி நிறுவனத்தை வீழ்த்தி விட்டன.

ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 1996ம் ஆண்டு நுழைந்தது. அப்போது முதலே மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு ஹூண்டாய் முக்கியமான போட்டியாளராக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் வெனியூ, க்ரெட்டா, ஐ20 உள்ளிட்ட கார்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் முக்கியமான மாடல்களாக இருந்து வருகின்றன.

ஹூண்டாய் நிறுவனம் அடுத்ததாக க்ரெட்டா 5 சீட்டர் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அல்கஸார் என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய மாடல், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் புதிய டாடா சஃபாரி ஆகிய கார்களுக்கு விற்பனையில் கடும் சவால் அளிக்கவுள்ளது.

அதே நேரத்தில் கியா நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டுதான் இந்திய சந்தையில் காலடி வைத்தது. அந்நிறுவனம் இந்திய சந்தையில் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்த கார் செல்டோஸ் ஆகும். அதன்பிறகு கார்னிவல் மற்றும் சொனெட் ஆகிய கார்களையும் கியா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்த மூன்று கார்களுக்குமே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில், செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகியவை எஸ்யூவி கார்கள் ஆகும். கார்னில் சொகுசு எம்பிவி செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கார்னிவலுக்கு இந்திய சந்தையில் நேரடி போட்டி என எந்த காரும் இல்லை.

எனினும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிக்கு, கியா கார்னிவல் விற்பனையில் போட்டியை வழங்கி வருகிறது. அதே நேரத்தில் செல்டோஸ் எஸ்யூவியானது, ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுடனும், சொனெட் எஸ்யூவியானது மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட கார்களுடனும் போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








