10 லட்ச ரூபாய் விலைக்குள் வரப்போகுது... புதிய காம்பேக்ட் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது எம்ஜி...
இந்திய சந்தையில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பு ஆண்டு புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்து கார்அண்ட்பைக் செய்தி வெளியிட்டுள்ளது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு கீழாக இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி நிலைநிறுத்தப்படும். அத்துடன் எம்ஜி நிறுவனத்தின் மிகவும் விலை குறைந்த மாடலாகவும் இது இருக்கும்.

நடப்பாண்டில் புதிய எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி கௌரவ் குப்தா சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் இது சப்-காம்பேக்ட் எஸ்யூவியா? இல்லையா? என்பதை தற்போதைய நிலையில் உறுதி செய்ய முடியவில்லை.

ஆனால் ஹெக்டருக்கு கீழாக நிலை நிறுத்தப்படுவதால், இது சப்-காம்பேக்ட் எஸ்யூவியாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இதன் ஆரம்ப விலை 10 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்திய சந்தையில் தற்போது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது? என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கார் செக்மெண்ட்டாக சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் உள்ளது. எனவே ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சம் ஒரு காரையாவது இந்த ரகத்தில் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டும் என விரும்புகின்றன. இதன் காரணமாக சமீப காலமாக இந்த செக்மெண்ட்டில் பல்வேறு நிறுவனங்கள் புதிதாக நுழைந்து வருகின்றன.

இதன்படி எம்ஜி நிறுவனமும், புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும்பட்சத்தில், அது மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியிடும். அத்துடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கைகர் காருக்கும் கடுமையான சவாலை வழங்கும்.

போட்டியாளர்களை சமாளிக்க வசதியாக, பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளுடனும் இந்த புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவியை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தற்போதைய நிலையில் எந்த தகவலையும் உறுதி செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் ஹெக்டர் எஸ்யூவி, ஹெக்டர் ப்ளஸ், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, க்ளோஸ்ட்டர் ஃபுல்-சைஸ் பிரீமியம் எஸ்யூவி உள்ளிட்ட மாடல்களை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவியும் நடப்பாண்டு இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவியானது, டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுடனும், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியானது, ஹூண்டாய் கோனாவுடனும் போட்டியிட்டு வருகிறது. அதே சமயம் டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் உள்ளிட்ட கார்களுக்கு எம்ஜி க்ளோஸ்ட்டர் விற்பனையில் சவால் அளித்து வருகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








