ஜியோ உடன் கூட்டணி தொடங்கிய சீனருக்கு சொந்தமான நிறுவனம்... ஏன் தெரியுமா?..
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் சீனருக்கு சொந்தமான கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று கூட்டணியைத் தொடங்கியுள்ளது. இந்த கூட்டணி எதற்காக என்பது பற்றிய தகவலை கீழே காணலாம், வாங்க.

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி நிறுவனம், இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ உடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கூட்டணியானது விரைவில் அறிமுகமாக இருக்கும் ஓர் எஸ்யூவி காருக்காக என கூறப்படுகின்றது.

அதாவது, புதிய காரில் இணையம் (இணைப்பு) வசதியை வழங்கும் நோக்கில் ரிலையன்ஸ் ஜியோ உடன் இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் எம்ஜி இந்தியாவின் ஜியோ உடன் இணைந்திருக்கின்றது. தங்களின் இணைவுகுறித்த தகவலை எம்ஜி மோட்டார் இந்தியா இன்று (செவ்வாய்) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

எம்ஜி நிறுவனம் ஓர் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது. தற்போது இந்திய சந்தையில் மின்சார காராக விற்பனைக்குக் கிடைத்து வரும் இசட்எஸ் எஸ்யூவி காரையே விரைவில் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் எம்ஜி களமிறக்க இருக்கின்றது.

இந்த காரில் இணைய வசதியை வழங்குவதற்காகவே எம்ஜி நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ உடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றன. மிக விரைவில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவையை இந்தியாவில் தொடங்க இருக்கின்றது. தற்போது வேகமான 4ஜி சேவையை நிறுவனம் செய்து வழங்கி வருகின்றது.

இந்த சேவையை தனது காரில் வழங்கும் நோக்கிலும், தொலை தூர பயணத்தின்போதும் தடையில்லா இணைய சேவையை வழங்கும் நோக்கிலும் கூட்டணி செய்யப்பட்டுள்ளது. இந்த இணைவைத் தொடர்ந்து ஜியோ நிறுவனம் காருக்கான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை உருவாக்க இருக்கின்றது. இது நிகழ்நேர டெலிமாடிக்ஸ் வசதியை வழங்கும் திறன் கொண்டது.

இசட்எஸ் காரில் மட்டுமின்றி எம்ஜி நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்பிலும் ஜியோவின் இச்சேவை இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியர்கள் மத்தியில் சொகுசு வசதிகள் நிறைந்த வாகனங்களுக்கு நிலவுவதைப் போலவே அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட வாகனங்களுக்கும் எதிர்பார்ப்பு மிக அதிகமாக நிலவுகின்றது.

இந்த நிலையை உணர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் வாகனங்களில் இணைப்பு வசதி வழங்க தொடங்கியிருக்கின்றன. இதன் வாயிலாக வாகனம்குறித்த பல்வேறு தகவல்களை உலகின் எந்த மூலையில் இருந்து நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எம்ஜி நிறுவனம் இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டே கால் தடம் பதித்தது. இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் ஓர் சீனருக்கு சொந்தமான நிறுவனம் ஆகும். இது, ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், இசட்எஸ் இவி மற்றும் குளோஸ்டர் ஆகிய கார்களை விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

இதில், எம்ஜி இசட்எஸ் இவி காரை தவிர மற்ற அனைத்தும் பெட்ரோலிய எரிபொருளால் இயங்கக் கூடியவை ஆகும். எம்ஜி இசட் எஸ் இவி ஓர் பிரீமியம் தர வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் காராகும். இது இந்தியாவில் ரூ. 20.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாகவும், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாகவும் இது இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றது.

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அடிப்படையிலான புதுமுக மிட்-சைஸ் எஸ்யூவி காரானது, அஸ்டர் எனும் பெயரில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, இது வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னரே விற்பனைக்கு வந்துவிடும் எனவும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








