புதிய உச்சத்தை தொட்ட ஹூண்டாய் அல்கஸார் கார்களின் விற்பனை!! எக்ஸ்யூவி700 தொடர்ந்து முதலிடம்!
கடந்த 2021 நவம்பர் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

செடான் & ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை கடந்த சில மாதங்களாக சற்று குறைந்து வருவதால், எஸ்யூவி கார்களின் விற்பனை ஏற்றம் கண்டு வருகிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த நவம்பர் மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-25 கார்களில் மாருதி சுஸுகியின் செடான் மாடலான டிசைர் மட்டுமே ஒரே ஒரு செடான் காராக உள்ளது.

எஸ்யூவிகளில், நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் கடந்த மாதத்தில் மொத்தம் 11,953 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, இதற்கு முந்தைய 2021 அக்டோபருடன் ஒப்பிடுகையில் 11.02% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 13,433 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கடந்த மாதத்திலும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட நடுத்தர-அளவு எஸ்யூவி காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700 விளங்குகிறது. மஹிந்திராவின் சமீபத்திய அறிமுகமான எக்ஸ்யூவி700 கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 3,207 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், எக்ஸ்யூவி700 கார்களின் விற்பனை 2021 அக்டோபருடன் ஒப்பிடுகையில் 5.87% குறைவாகும்.

ஏனென்றால், கடந்த அக்.இல் இந்த மஹிந்திரா மிட்-சைஸ் எஸ்யூவி காரின் விற்பனை எண்ணிக்கை 3,407 ஆக இருந்தது. ஒட்டு மொத்த நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் விற்பனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களின் பங்கு 26.83% ஆகும். ஆனால் உண்மையில், இந்த சதவீதம் 2021 அக்டோபரை (25.36%) காட்டிலும் 1.47% அதிகமாகும்.

இதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் டாடா ஹெரியர் 2,607 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் கடந்த அக்டோபரில் ஹெரியரின் விற்பனை 3 ஆயிரம் யூனிட்களை கடந்து 3,097 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்படி கடந்த நவம்பரில் ஹெரியர் கார்களின் விற்பனை 15.82% சரிந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்த விற்பனையில் ஹெரியரின் பங்கு 21.81% ஆகும்.

மூன்றாவது இடத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸின் நடுத்தர-அளவு எஸ்யூவி காரான அல்கஸார் உள்ளது. கடந்த மாதத்தில் அல்கஸார் 2,453 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தை காட்டிலும் கடந்த நவம்பரில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஒரே ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி கார் அல்கஸார் மட்டுமே ஆகும். ஏனெனில் கடந்த அக்டோபரில் அல்கஸாரின் விற்பனை எண்ணிக்கை 1,392 ஆக இருந்தது.

இந்த வகையில் அல்கஸாரின் விற்பனை எண்ணிக்கை சுமார் 76.22% அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், மொத்த விற்பனையில் இந்த காரின் பங்கும் 10.36%-இல் இருந்து 20.52% ஆக உயர்ந்துள்ளது. இதற்கடுத்த இடத்தில் டாடா மோட்டார்ஸின் நீளமான எஸ்யூவி காரான சஃபாரி 1,424 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. கடந்த அக்டோபரில் இதனை காட்டிலும் 17.93% அதிகமாக 1,735 சஃபாரி கார்கள் விற்கப்பட்டு இருந்தன.

ஒட்டு மொத்த மிட்-சைஸ் கார்களின் விற்பனையில் டாடா சஃபாரியின் பங்கு 1% கடந்த அக்டோபரை காட்டிலும் குறைந்துள்ளது. இதற்கடுத்து இந்த லிஸ்ட்டில் சஃபாரியை நெருக்கமாக பின் தொடர்ந்தவாறு கடைசி இரு இடங்களில் எம்ஜி ஹெக்டர் மற்றும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,210 மற்றும் 1,052 யூனிட்களாகும்.

இதில் குறிப்பாக எம்ஜி மோட்டாரின் முதல் இந்திய காரான ஹெக்டரின் விற்பனை 2021 அக்டோபர் உடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் பாதியாக (51%) குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 2,478 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, இந்த சேல்ஸ் லிஸ்ட்டில் முன்னிலையில் ஹெக்டர் மாடல் இருந்தது. ஒட்டு மொத்த விற்பனையில் ஹெக்டரின் பங்கு 18.45% (2021 Oct) இல் இருந்து 10.12% ஆக சரிந்துள்ளது.

அமெரிக்க மிட்-சைஸ் எஸ்யூவி காரான ஜீப் காம்பஸின் விற்பனையும் கடந்த மாதத்தில் குறைந்துள்ளது என்றாலும், ஹெக்டர் அளவிற்கு இல்லை. கடந்த அக்டோபரை காட்டிலும், கடந்த நவம்பரில் 272 காம்பஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் மொத்த விற்பனையில் ஜீப் காம்பஸின் பங்கு 8.80% ஆக குறைந்துள்ளது.

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸின் இரட்டை எஸ்யூவி கார்களுக்கும் (ஹெரியர் & சாஃபாரி), எம்ஜி மோட்டாரின் இரட்டை எஸ்யூவி கார்களுக்கும் (ஹெக்டர் & ஹெக்டர் ப்ளஸ்) இடையே சமீப மாதங்களாக பலத்த போட்டி உருவாகி வந்தது. ஆனால் கடந்த மாத விற்பனையின்படி பார்த்தோமேயானால், இந்த போட்டியில் டாடா மோட்டார்ஸ் மிக எளிதாக வெற்றி பெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடந்த மாதத்தில் ஒரு ஹெக்டர் ப்ளஸ் கார் கூட விற்பனை செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications








