புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ அறிமுக விபரம்... எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா?
புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரின் அறிமுக விபரம் வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை செலிரியோ காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுபட்டு வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். நடப்பாண்டு ஏப்ரல் மாதமே புதிய தலைமுறை செலிரியோ விற்பனைக்கு கொண்டு வரப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது நடக்கவில்லை. கொரோனா வைரஸ் இரண்டாவது அலைதான் இதற்கு காரணம். இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தற்போதுதான் அந்த பாதிப்புகளில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. இதற்கிடையே புதிய தலைமுறை செலிரியோ காரின் அறிமுகத்தை மாருதி சுஸுகி நிறுவனம் ஒத்தி வைத்து விட்டது.

இந்த சூழலில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரின் அறிமுகம் தொடர்பாக தற்போது ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி வரும் செப்டம்பர் மாதம் புதிய தலைமுறை செலிரியோ காரை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இதுகுறித்து பிஸ்னஸ் லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரில், 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் என மொத்தம் இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் 5வது தலைமுறை ஹார்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை செலிரியோ காரை மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக சாலை சோதனைக்கு உட்படுத்தி வருகிறது. அந்த ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகியுள்ளன. இதை வைத்து பார்க்கையில் சந்தையை விட்டு வெளியேறவுள்ள பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய தலைமுறை மாடல் பெரிதாக இருக்கும் என்பது தெரியவருகிறது.

இதற்கிடையே மாருதி சுஸுகி நிறுவனம் மீண்டும் டீசல் இன்ஜின் கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக, டீசல் இன்ஜின் கார்களை விற்பனை செய்வதை மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தி விட்டது. ஆனால் டீசல் கார்களுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

எனவே மாருதி சுஸுகி நிறுவனம் மீண்டும் டீசல் கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன்படி மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில், பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணக்கமான 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த டீசல் இன்ஜின் தேர்வுடன் கூடிய எக்ஸ்எல்6 அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தையொட்டி அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தெரிகிறது.

இதுதவிர சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. இந்த செக்மெண்ட்டில் பல்வேறு புதிய வரவுகளின் ஏற்பட்டுள்ள போட்டியை இதன் மூலம் சமாளிக்க மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








