புதிய ஹோண்டா எச்ஆர்வி ஹைப்ரிட் கார் விரைவில் இந்தியா வருகிறது... க்ரெட்டாவுக்கு போட்டி!
புதிய ஹோண்டா எச்ஆர்வி ஹைப்ரிட் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த முக்கியத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் அதிக வர்த்தக வாய்ப்பு இருந்து வருகிறது. ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் கிடைத்து வரும் அபரிதமான வரவேற்பு, பிற கார் நிறுவனங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் வர்த்தகத்தை ஸ்திரப்படுத்தும் முனைப்பில் உள்ள ஹோண்டா நிறுவனம் தனது எச்ஆர்வி எஸ்யூவியை இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

அண்மையில் தாய்லாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிய தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட எச்ஆர்வி எஸ்யூவிதான் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடலானது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், பண்டிகை காலத்தில் எதிர்பார்க்கலாம் என டீம் பிஎச்பி தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

புதிய ஹோண்டா எச்ஆர்வி அண்மையில் மூன்றாம் தலைமுறை மாடலாக பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யூவி க்ராஸ்ஓவர் ரக மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியில் 1.5 லிட்டர் மற்றும் மின் மோட்டார்கள் கொண்ட ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலானது 109 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலிலும் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மாடலானது 121 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் 4,450 மிமீ நீளமும் 1,780 மிமீ அகலமும், 1,600 மிமீ உயரமும் கொண்டது. 2,630 மிமீ வீல்பேஸ் நீளம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உட்புறம் மிக சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும்.

வசதிகளிலும் சிறப்பான மாடலாக இருக்கும். 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், கெஸ்ச்சர் கன்ட்ரோல் மூலமாக டெயில் கேட் திறக்கும் வசதி மற்றும் ஹோண்டா கனெக்ட் என்ற கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.


Click it and Unblock the Notifications








