ஒரே ஆண்டில் ஒன்னே கால் லட்சம் கார்கள் விற்பனை... புதிய ஹூண்டாய் கிரெட்டாவின் வெற்றியின் ரகசியம் இதுதான்...
புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி விற்பனையில் தூள் கிளப்பி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டது. அதன்பின் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த ஓராண்டு காலத்தில், 1.21 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி கார்கள் விற்பனையாகியுள்ளன.

ஹூண்டாய் நிறுவனம் இந்த தகவலை இன்று (மார்ச் 16) தெரிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 16ம் தேதிதான் புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தலைமுறை கிரெட்டா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு கடந்துள்ள நிலையில், இந்த தகவலை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி முதல் முறையாக இந்திய சந்தையில் கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்த உடனேயே இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த எஸ்யூவி கார்களில் ஒன்றாக ஹூண்டாய் கிரெட்டா உருவெடுத்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் தற்போது வரை இந்தியாவில் 5.80 லட்சத்திற்கும் மேற்பட்ட கிரெட்டா எஸ்யூவிகளை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியில் ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில், ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பேடில் ஷிஃப்டர்கள், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், டிரைவர் ரியர்வியூ மானிட்டர், ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

அத்துடன் பல்வேறு இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தேர்வுகளுடன் புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு கிடைக்கிறது. இதன்படி புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஐவிடி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதுதவிர 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வையும் புதிய ஹூண்டாய் கிரெட்டா பெற்றுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் 1.4 லிட்டர் கப்பா டர்போ ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் தேர்வும் புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியில் வழங்கப்படுகிறது.

இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் தேர்வை ஹூண்டாய் வழங்குகிறது. இப்படி பல்வேறு இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் ஏராளமான வசதிகளையும் புதிய ஹூண்டாய் கிரெட்டா பெற்றுள்ளதுதான் அதன் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் தேவைகளையும் புதிய ஹூண்டாய் கிரெட்டா பூர்த்தி செய்கிறது.

தற்போதைய நிலையில் கியா செல்டோஸ் எஸ்யூவி உள்ளிட்ட கார்களுடன் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி கார் போட்டியிட்டு வருகிறது. புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரின் வருகை, இந்திய சந்தையில் கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








