உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த நார்வே... என்ன செய்தது என தெரிந்தால் அசந்திருவீங்க!
எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் நார்வே புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலக நாடுகள் அனைத்தும் ஐசி இன்ஜினில் இயங்கும் வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வேகமாக மாறி வருகின்றன. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை நார்வே அதிகமாக ஊக்குவித்து வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது புதிய சாதனை ஒன்றை நார்வே படைத்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு நார்வேயில் பதிவு செய்யப்பட்ட புதிய கார்களில் 50 சதவீதத்திற்கும் மேலானவை எலெக்ட்ரிக் கார்கள் ஆகும். அதாவது 100 கார்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றால், அதில் 50க்கும் மேற்பட்டவை எலெக்ட்ரிக் கார்கள் ஆகும். இத்தகைய சாதனையை படைத்துள்ள உலகின் முதல் நாடாக நார்வே தெரிவிக்கப்படுகிறது.

துல்லியமாக சொல்வதென்றால், கடந்த 2020ம் ஆண்டு நார்வேயில் பதிவு செய்யப்பட்ட புதிய கார்களில் 54.3 சதவீத கார்கள் எலெக்ட்ரிக் கார்கள் ஆகும். கடந்த 2019ம் ஆண்டு நார்வேயில் பதிவு செய்யப்பட்ட புதிய கார்களில், எலெக்ட்ரிக் கார்களின் சதவீதம் 42.4 ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நார்வேயில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு வேகமாக உயர்ந்து வருவதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

ஆடி இ-ட்ரான், டெஸ்லா மாடல் 3, ஃபோக்ஸ்வேகன் ஐடி.3 மற்றும் நிஸான் லீஃப் ஆகிய நான்கும்தான் நார்வேயில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களாக உள்ளன. வரும் 2025ம் ஆண்டிற்குள் நார்வேயில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய கார்களும் 'ஜீரோ எமிஷன்' கார்களாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கான முயற்சிகளை நார்வே மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் நார்வே உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது என்றால் மிகையல்ல. எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்கால உலகை ஆளப்போகின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலை வெகுவாக மாசுபடுத்துவதாலும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக பெரிய தொகையை செலவிட வேண்டியிருப்பதாலும் உலகின் பல்வேறு நாடுகளுடைய அரசுகளின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளது. இதில், இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

ஆனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. தற்போதுதான் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் ஏற்படுத்துவது, எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியங்கள் மற்றும் சலுகைகள் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

எனவே மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகளவில் ஏற்பட தொடங்கியுள்ளது. எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான டெஸ்லா நடப்பாண்டில் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைக்கவுள்ளது. எனவே வரும் காலங்களில் இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை படிப்படியாக உயரும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








