வெறும் 3 கார்களை வைத்து கொண்டு கெத்து காட்டும் கியா... அக்டோபர் மாதம் இத்தனை கார்கள் விற்பனையா?
கியா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது? என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் எத்தனை கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன? என்பதை கியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி இந்திய சந்தையில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 16,331 கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார் என்ற பெருமையை செல்டோஸ் பெற்றுள்ளது.

உலக அளவில் செமி கண்டக்டர் பற்றாக்குறை பிரச்னையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கியா நிறுவனம் இந்திய சந்தையில் சீராக செயல்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் என மொத்தம் 3 கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இதில் கடந்த அக்டோபர் மாதம் கியா நிறுவனம் 10,488 செல்டோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார் என்ற பெருமையை செல்டோஸ் பெற்றுள்ளது. அதே நேரத்தில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் கியா நிறுவனம் 5,443 சொனெட் கார்களை விற்பனை செய்துள்ளது.

இதுதவிர 400 கார்னிவல் கார்களையும் கியா நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக நடப்பாண்டு அக்டோபரில் இந்திய சந்தையில் கியா நிறுவனம் 16,331 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுதவிர மற்றொரு முக்கியமான சாதனை குறித்த அறிவிப்பையும் கியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

2021ம் காலாண்டர் ஆண்டில் கியா நிறுவனம் இந்திய சந்தையில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்திருப்பதுதான் அந்த சாதனை. கியா நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 1,59,641 கார்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் கடந்த 2020ம் ஆண்டு இதே காலகட்டத்தில் கியா நிறுவனம் வெறும் 1,07,657 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்த்தால் 48 சதவீத வளர்ச்சியை கியா நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற கார்களை கியா நிறுவனம் அறிமுகம் செய்து கொண்டிருப்பதுதான் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இது இந்திய சந்தைக்கு புதிய நிறுவனம் ஆகும்.

இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக செயல்பட்டு வந்த ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் வெளியேறி விட்ட நிலையில், கியா நிறுவனத்தின் வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. வரும் காலங்களில் இன்னும் நிறைய கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், எலெக்ட்ரிக் கார்களும் அடங்கும்.

குறிப்பாக இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் வெற்றிகரமான தயாரிப்பாக கருதப்படும் செல்டோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்வதற்கு கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கியா செல்டோஸ் மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும். ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷாக் உள்ளிட்ட கார்களுடன் இது போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








