5 லட்ச ரூபாய்க்கு எஸ்யூவி கார்... ரெனால்ட் கைகர் விற்பனைக்கு வரும் தேதி கசிந்தது... எப்போனு தெரியுமா?
ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு வரும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி இந்திய சந்தையில் வரும் பிப்ரவரி 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஃபர்ஸ்ட்போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கடுமையான போட்டி நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ரெனால்ட் கைகர் நிலைநிறுத்தப்படவுள்ளது.

கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் தயாரிப்பு நிலை வெர்ஷனை ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வந்து விட்டது. அத்துடன் சென்னையில் உள்ள ஆலையில் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் உற்பத்தியும் முழு வீச்சில் தொடங்கப்பட்டு விட்டது. முன்பதிவு மற்றும் டெஸ்ட் டிரைவ் ஆகியவையும் ரெனால்ட் டீலர்ஷிப்களில் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

நிஸான் மேக்னைட் காரை போலவே, ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவியும் CMF-A+ பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்படுகிறது. ரெனால்ட் கைகர் காரின் நீளம் 3,991 மிமீ. அகலம் 1,750 மிமீ. உயரம் 1,600 மிமீ. வீல் பேஸ் நீளம் 2,500 மிமீ. அதே சமயம் இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 205 மிமீ-ஆக உள்ளது.

அதே சமயம் ரெனால்ட் கைகர் காரில், 8.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும், 7.0 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஸ்பீக்கர் சவுண்டு சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் போன் சார்ஜிங், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், பிஎம் 2.5 ஃபில்டர் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின் தேர்வுகள்தான் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரிலும் கொடுக்கப்படவுள்ளது. எனவே இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளில் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி கார் கிடைக்கும். இந்த காரில் டீசல் இன்ஜின் தேர்வு இல்லை.

ரெனால்ட் கைகர் காரில், 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். அல்லது 100 ஹெச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடிய இதே இன்ஜினின் டர்போசார்ஜ்டு வெர்ஷனை தேர்வு செய்யலாம்.

கடந்த டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் காருக்கு மிகவும் சவாலான விலையை நிர்ணயம் செய்து நிஸான் நிறுவனம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ரெனால்ட் கைகர் காருக்கும் இதேபோல் சவாலான விலைதான் நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இதன்படி 5 லட்ச ரூபாய் முதல் 9.5 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் ரெனால்ட் கைகர் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், ஹூண்டாய் வெனியூ, நிஸான் மேக்னைட், கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் கைகர் போட்டியிடவுள்ளது.


Click it and Unblock the Notifications








