3வது தலைமுறை மாடலும் இல்லையா? முதல் தலைமுறை டஸ்ட்டரை வைத்தே காலத்தை ஓட்ட ரெனோ திட்டம்!
புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு வரும் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. முதல் தலைமுறை மாடலை வைத்தே ஓட்டுவதற்கு ரெனோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த ரகத்தில் முதலாவதாக வந்த ரெனோ டஸ்ட்டர் சூப்பர் ஹிட் மாடலாக இருந்தது. ஆனால், அடுத்து வந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார்களும், கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா போன்ற போட்டியாளர்களும் சேர்த்து ரெனோ டஸ்ட்டரின் மார்க்கெட்டை தகர்த்துவிட்டன.

இந்த சூழலில், கடந்த 2019ம் ஆண்டு இரண்டாம் தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதில்லை என்று ரெனோ முடிவு செய்தது. எனவே, வரும் 2023ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட மூன்றாம் தலைமுறை மாடல்தான் இந்தியா வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்த செய்தியிலும் இடி விழும் வகையில், மூன்றாம் தலைமுறை மாடலையும் இந்தியாவில் கொண்டு வருவதற்கான திட்டம் ரெனோவிடம் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. புதிய தலைமுறை டஸ்ட்டரை அறிமுகம் செய்வதில் உள்ள ரிஸ்க் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்நிறுவனத்தின் அதிகாரி கூறி இருக்கிறார்.

இதனால், மூன்றாம் தலைமுறை ரெனோ டஸ்ட்டரும் உலக அளவில் வெளியிடப்படும்போது, இந்தியாவில் உடனடியாக வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. கார் அண்ட் பைக் தளம் இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி CMF-A கட்டமைப்புக் கொள்கைக்கு பதிலாக CMF-B கட்டமைப்புக் கொள்கையில் வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், இரண்டாம் தலைமுறை மாடலைவிட பரிமாணத்தில் பெரிதாக இருக்கும்.

அண்மையில் வெளியிடப்பட்ட டேஸியா பிக்ஸ்டெர் கான்செப்ட் மாடல் அடிப்படையில்தான் புதிய தலைமுறை டஸ்ட்டர் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. டஸ்ட்டர் விற்பனை குறைந்து வந்தாலும், இதுவரை 2 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி இருக்கிறது.

புதிய தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டால், நிச்சயம் வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. துரதிருஷ்டவசமாக மூன்றாம் தலைமுறை மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்வதை தவிர்க்க ரெனோ முடிவு செய்திருப்பதாக வெளியானத் தகவல் சற்று ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்கள் வலுவான வர்த்தகத்தை வைத்திருப்பதால், இப்போது அறிமுகம் செய்வது குறித்து ரெனோ தயங்குவதாக தெரிகிறது. ஆனால், மூன்றாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்படும்போது அந்த காலக்கட்டத்தை ஆய்வு செய்து ரெனோ நிறுவனம் நிச்சயம் பரிசீலிக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








