கார்களின் விலையை உயர்த்த மேலும் ஒரு நிறுவனம் முடிவு... இப்படியே போனா சொந்த கார் வாங்க முடியாது போலயே!
கார்களின் விலைகளை உயர்த்துவதற்கு மேலும் ஒரு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளின் விலையும் உயரவுள்ளது. கார்களின் விலை 3 சதவீதம் வரை உயரும் என ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் குஷாக், கோடியாக் மற்றும் ஆக்டேவியா உள்ளிட்ட கார்களை ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், குஷாக் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது குஷாக் காருக்கு இந்திய சந்தையில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ பிராண்டு இயக்குனர் ஜேக் ஹோலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து விலைகளை உயர்த்துவது என்பது உற்பத்தி செலவு மற்றும் இயங்கு செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் எடுக்கப்பட்ட முடிவாகும்'' என கூறியுள்ளார். சமீப காலமாகவே கார்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மூலப்பொருட்களின் விலை உயர்வுதான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது ஸ்டீல், அலுமினியம் மற்றும் காப்பர் ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கார்களின் விலைகளை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

முன்னதாக புத்தாண்டு முதல் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக ஏராளமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதில், மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் முக்கியமானவை. இந்த வரிசையில் தற்போது ஸ்கோடா இந்தியா நிறுவனமும் இணைந்துள்ளது.

வரும் நாட்களில் இன்னும் பல்வேறு நிறுவனங்கள் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புத்தாண்டிற்கு புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு காரணமாக கார்களின் விற்பனை குறையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளால் ஆட்டோமொபைல் துறை தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக உலகளாவிய அளவில் நிலவி வரும் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னையால் கார்களின் உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி குறைந்துள்ளதால், வாடிக்கையாளர்களின் தேவையை கார் நிறுவனங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக பெரும்பாலான கார் நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கை மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் கார்களை டெலிவரி செய்ய முடியாமல் கார் உற்பத்தி நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. இந்த நேரத்தில் விலை உயர்வு பிரச்னையும் சேர்ந்து கொண்டுள்ளது.

கார்களின் விலை உயர்விற்கு செமி கண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறையும் கூட ஒரு முக்கியமான காரணம்தான். டெலிவரி பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும், தொடர்ச்சியான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிய கார்களை வாங்குவதற்கு தற்போது வாடிக்கையாளர்கள் பலர் தயக்கம் காட்ட தொடங்கியுள்ளனர்.

அதற்கு பதிலாக செகண்ட் ஹேண்ட் கார்களின் மீது அவர்களின் ஆர்வம் திரும்பி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட் தற்போது வேகமாக வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது. வரும் காலங்களில் செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட் இன்னும் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கியா உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட்டில் நுழைவதற்கு திட்டமிட்டு வருகின்றன. இதில் கியா நிறுவனம் அடுத்த ஆண்டு செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் நுழைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








